2013-05-24 16:31:31

திருத்தந்தை பிரான்சிஸ் : குடியேற்றதாரர் மனிதர்கள் என்பதை அரசுகள் மறக்கக் கூடாது


மே,24,2013. கட்டாயத்தின்பேரில் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் மக்களின் மாண்பும் வாழ்க்கைத்தரமும் முன்னேறுவதற்கு அரசுகளும் சட்ட அமைப்பாளர்களும் அனைத்துலகச் சமுதாயமும் புதிய அணுகுமுறைகளைக் கையாளுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடக் குடியேற்றதாரர் அவை நடத்திய மூன்று நாள் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏறக்குறைய 70 பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமையன்று சந்தித்த திருத்தந்தை, அகதிகளும் கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களும், அடக்குமுறைகள், துன்புறுத்தல்கள், அடிமைத்தனம் ஆகியவற்றின் நவீன முறைகளை எதிர்நோக்கியவர்கள் என்று கூறினார்.
பணம் ஆட்சி செய்யும் ஓர் உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம், உரிமைகளைப் பற்றி அதிகம் பேசும் உலகில் பணத்தைக் கொண்டிருப்பதுவே பெரிதாக இருப்பதுபோல் தெரிகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
“அகதிகள் மற்றும் கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களில் கிறிஸ்துவை வரவேற்றல்” என்ற தலைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தினருக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், அகதிகள் மற்றும் குடியேற்றதாரர் மத்தியில் பணி செய்கிறவர்கள், தங்களது பணியை, நம்பிக்கையின் பணியாக நோக்குமாறு வலியுறுத்தினார்.
எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்புக்களில் வெளிப்படும் கூறுகளில் ஒன்றாக இந்நம்பிக்கை தன்னிலே இருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, வேரோடு பிடுங்கி எறியப்பட்டு பல கஷ்டங்களை அனுபவித்த பின்னர் இம்மக்கள் தங்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உழைப்பது வியப்பைத் தருகின்றது என்றும் உரைத்தார்.
கிறிஸ்தவ வாழ்விலும் பணியிலும் அந்நியரை வரவேற்க வேண்டிய கடமை இருப்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஒரு மனிதரை மோசமாக நடத்துவது வெட்கத்துக்குரியது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.