மே,23,2013. இயற்கை நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கும், அவை குறித்த புரிதல் ஏற்படுவதற்கும்
அறிவியல்ரீதியான கூட்டுமுயற்சி இன்றியமையாதது என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது. இப்புதனன்று
கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக உயிரினப் பன்மைத்தன்மை நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.
பொதுச் செயலர் பான் கி மூன், தண்ணீருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை அதிகரித்துவரும் ஓர்
உலகத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம், தற்போதைய நிலை நீடித்தால், தண்ணீருக்கான வருங்காலத்
தேவைகள் நிறைவேற்றப்படாமல் விடப்படும் என்று எச்சரித்துள்ளார். தண்ணீர்ப் பற்றாக்குறை
ஏறக்குறைய ஒவ்வொரு கண்டத்தையும் பாதித்துள்ளது மற்றும் இப்பூமியில் 40 விழுக்காட்டுக்கும்
மேற்பட்ட மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா.வின் உணவு மற்றும்
வேளாண்மை நிறுவனம் கூறியுள்ளது. தண்ணீரும் உயிரினப் பன்மைத்தன்மையும் என்ற தலைப்பில்
இவ்வாண்டின் இவ்வுலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இப்பூமியிலுள்ள மொத்தத் தண்ணீரின்
அளவில், 2.5 விழுக்காடு சுத்தத் தண்ணீர் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது.