2013-05-22 16:59:12

அன்னைமரியா திருத்தலங்கள் – Sheshan அன்னைமரியா திருத்தலம், சீனா
(Our Lady of Sheshan )


மே,22,2013. கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்யும் சகாய அன்னைமரித் திருவிழாவை மே 24ம் தேதியன்று சிறப்பிக்கிறோம். சகாய அன்னைமரி, சீனாவின் ஷங்காயில் Sheshan அன்னைமரியா என்று அழைக்கப்பட்டு மிகவும் போற்றப்பட்டு வருகிறார். சீனாவில் வாழும் நம் சகோதர சகோதரிகளுக்காக இத்தாயிடம் செபிப்போம் என, இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்தார். இந்த Sheshan அன்னைமரியா பசிலிக்கா, Songjiang மாவட்டத்தின் Shanghai நகரில் 100 மீட்டர் உயரமுடைய Sheshan குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கியத் திருத்தலங்களில் ஒன்றாகவும், சீனாவின் தேசியத் திருத்தலமாகவும், மைனர் பசிலிக்காவாகவும் விளங்குகிறது. சீனாவில் கலாச்சார புரட்சி ஏற்பட்ட பின்னர், இந்தத் தேசியத் திருத்தலம் கிழக்கு ஆசியாவில் வரலாற்று சிறப்புமிக்க முதல் திருத்தலமாக உள்ளது. Sheshan அன்னைமரியா, சகாய அன்னை என்ற பெயரில் மிகுந்த வணக்கத்துக்கு உரியவராய்ப் போற்றப்பட்டு வருகிறார். Sheshan அன்னைமரியாத் திருவிழா ஆண்டுதோறும் மே 24ம் தேதியன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சீனாவில் இந்தத் திருத்தலத்தின் அதிகாரப்பூர்வப் பெயர் புனித அன்னை ஆலயம் என்பதாகும்.
Songjiang மாவட்டத்தில் கத்தோலிக்க விசுவாசம் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக கத்தோலிக்க விசுவாசம் தடைசெய்யப்பட்டிருந்தபோது அப்பகுதி மக்கள் மறைவாக தங்களது விசுவாசத்தைக் கடைப்பிடித்து வந்தனர். 1844ம் ஆண்டில் Sheshan சென்ற இயேசு சபை அருள்பணியாளர் Claude Gotteland, அப்பகுதியின் அமைதியான சூழல் மற்றும் அழகினால் ஈர்க்கப்பட்டு ஓய்வுபெற்ற அருள்பணியாளர்களுக்கென ஓர் இல்லம் கட்டத் தீர்மானித்தார். எனினும் இவரது கனவு நனவாகும் முன்னர் 1856ம் ஆண்டில் இவர் இறந்தார். அவருக்குப் பின்னர் 1863ம் ஆண்டில் Sheshan வந்த இயேசு சபை அருள்பணியாளர் Joseph Gonnet, அந்த Sheshan முழுக் குன்றையும், அதன் தென் பகுதியையும் விலைக்கு வாங்கி, சரிவான பகுதியில் வயதான மற்றும் நோயாளி மறைபோதகர்களுக்கெனத் துறவு இல்லங்களையும் ஓர் ஆலயத்தையும் கட்டினார். அடுத்த ஆண்டில் Desjacques Marin என்பவர், அந்தக் குன்றின் உச்சியில் அறுகோணமுடைய ஒரு கூடார மண்டபத்தைக் கட்டி அதில் அன்னைமரியா திருவுருவத்தை வைத்தார். இந்த அன்னைமரியாத் திருவுருவம், பாரிசிலுள்ள வெற்றியின் அன்னைமரியா திருவுருவம் போன்று வடிவமைக்கப்பட்டது. 1868ம் ஆண்டு மே முதல் தேதியன்று இயேசு சபை ஆயர் Adrien Languillat என்பவர் அந்த ஆலயத்தையும் Sheshan அன்னைமரியா திருவுருவத்தையும் அருள்பொழிவு செய்தார். அன்றுமுதல் சகாய அன்னை திருவிழாவன்று நூற்றுக்கணக்கானத் திருப்பயணிகள் அங்கு வந்து அந்த ஆலயத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட கூடாரத்தில் இடம்பெற்ற திருப்பலியில் பங்கெடுத்தனர்.
Qing அரசு பரம்பரையை வழிநடத்திய Manchuவுக்கு எதிராக தென் சீனாவில் 1850ம் ஆண்டு முதல் 1864ம் ஆண்டுவரை Taiping கடும் உள்நாட்டுக் கலவரம் இடம்பெற்றது. இதில் குறைந்தது 2 கோடி அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இப்புரட்சியின்போது கத்தோலிக்க ஆலயம் தாக்கப்பட்டது. ஷங்காயில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பல முற்சார்புத் தாக்குதல்களும் பதட்டநிலைகளும் ஏற்பட்டன. அப்போதைய இயேசு சபை தலைவர் A. Della Corte, Sheshan குன்றின் உச்சிக்கு ஏறி அங்கிருந்த அன்னைமரியாவின் திருவுருவத்துக்கு முன்பாக உருக்கமாகச் செபித்தார். இந்தப் பகுதி, தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்பட்டால் அவ்விடத்தில் ஆலயம் கட்டுவதாக அன்னைமரியாவிடம் வாக்குறுதி அளித்தார். அவரின் செபம் கேட்கப்பட்டது. ஷங்காய் மறைமாவட்டமும் சேதமின்றி காப்பாற்றப்பட்டது. அதனால் அன்னைமரியா தங்களைப் பாதுகாத்ததற்கு நன்றியாக, அக்குன்றின் உச்சியில் ஆலயம் கட்டுவதற்கு அந்த இயேசு சபை அருள்பணியாளர் Corte, 1870ம் ஆண்டு செப்டம்பரில் மக்களிடம் உதவி கேட்டார். 1871ம் ஆண்டு மே மாதத்தில் ஆயர் Languillat புதிய ஆலயத்துக்கு அடிக்கலை ஆசீர்வதித்தார். 60 ஆயிரம் விசுவாசிகள் அன்றையத் திருப்பலியில் கலந்து கொண்டனர். இந்த ஆலயம் குன்றின் உச்சியில் இருந்ததால் கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்வது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. ஆயினும் தன்னார்வத் தொண்டர்கள் இதற்கு உதவி செய்தனர்.
புதிய ஆலயம் கோதிக் கலைவடிவில் 1873ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி கட்டி முடிக்கப்பட்டு அருள்பொழிவு செய்யப்பட்டது. அக்குன்றுக்கு ஏறும் பாதையில் 14 சிலுவைப்பாதை நிலைகளும் அமைக்கப்பட்டன. மே மாதம் முழுவதும் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்குத் திருப்பயணமாக வரத் தொடங்கினர். முதல் ஆண்டிலே ஏறக்குறைய 14 ஆயிரம் பக்தர்கள் அங்கு வந்தனர். ஆயர் Languillat அவர்களின் வேண்டுகோளின்பேரில் திருத்தந்தை 9ம் பத்திநாதர், மே மாதத்தில் ஆண்டுதோறும் இங்குத் திருப்பயணம் மேற்கொள்வோருக்குப் பரிபூரண பலன்களை 1874ம் ஆண்டில் அருளினார். 1875ம் ஆண்டில் இந்த Sheshan அன்னைமரியாத் திருத்தலத்தில் பல ஆலய மணிகள் வைக்கப்பட்டன. இவைகளை அடிக்கும்போது தூர இடங்களிலிருந்தும் அவைகளைக் கேட்க முடியும். 1894ம் ஆண்டில், அக்குன்றுக்குச் செல்லும் பாதித் தூரத்தில் சீனக் கலைவடிவில் மற்றோர் ஆலயமும் கட்டப்பட்டது. இதன் முகப்பில் சீன மொழியில், குன்றின் உச்சியிலுள்ள அன்னைமரியா ஆலயத்துக்கு ஏறுவதற்கு முன்னர் இங்கு சற்று இளைப்பாறி செபித்துவிட்டுச் செல்லுங்கள் என எழுதப்பட்டுள்ளது.
இடப்பற்றாக்குறை காரணமாக 1925ம் ஆண்டில் பெரியதோர் ஆலயம் கட்டப்பட்டது. ஜப்பானியர்கள் சீனர்களை 1942ம் ஆண்டில் ஆக்ரமித்திருந்தபோது, இந்த sheshan அன்னைமரியாத் திருத்தலத்தை மைனர் பசிலிக்காவாக அறிவித்தார் திருத்தந்தை 12ம் பத்திநாதர். அதே ஆண்டு மே 12ம் தேதி அன்னைமரியாவின் திருவுருவம் முடிசூட்டப்பட்டது. 1946ம் ஆண்டு மே 8ம் தேதி திருப்பீடத்திடமிருந்து சிறப்பு ஆசீர்வாதம் வழங்கப்பட்டு sheshan அன்னைமரியா, சகாய அன்னைமரியா என முடிசூட்டப்பட்டார். எனவே இந்த Sheshan அன்னைமரியா, கிறிஸ்தவர்களுக்குச் சகாயம்புரியும் சகாய அன்னை என அழைக்கப்படலானார். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் அதில் கலந்து கொண்டனர். இத்திருத்தலம் மீண்டும் திருப்பயணத் தலமானது. சீனாவில் ஏற்பட்ட கலாச்சாரப் புரட்சியின்போது இந்த ஆலயம் கடுமையாய்ச் சேதமாக்கப்பட்டது. திருவுருவங்களும் சிலுவைப்பாதை நிலைகளும் அழிக்கப்பட்டன. 1981ம் ஆண்டில் ஷங்காய் அரசு இத்திருத்தலத்தை கத்தோலிக்கத் திருஅவையிடம் மீண்டும் ஒப்படைத்தது. ஷங்காய் உயர்மறைமாவட்டம் அதனை மீண்டும் பழுது பார்த்தது. 2008ம் ஆண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் sheshan அன்னைமரியாவுக்கு தனது கைப்பட ஒரு செபம் எழுதினார்.
புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் கி.பி. 345ம் ஆண்டில் சகாய அன்னைமரியா பக்தியை முதன் முதலில் பரப்பினார். அதற்குப் பின்னர் புனித ஜான் போஸ்கோவும் இப்பக்தியைப் பரப்பினார். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும் உக்ரேய்னில் 1030ம் ஆண்டிலிருந்து சகாய அன்னைமரியா பக்தியைக் கொண்டுள்ளனர்.
sheshan அன்னைமரியாவான சகாயத் தாயிடம் செபிப்போம். சீனாவில் வாழும் நம் சகோதர சகோதரிகளுக்காக, சீனாவின் நம்பிக்கையான அத்தாயிடம் சிறப்பாகச் செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.