2013-05-22 17:09:55

Oklahoma சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள அனுதாபத் தந்தி


மே,22,2013. Oklahoma சூறாவளியில் உயிரிழந்த அனைவரையும், சிறப்பாக, அங்கு உயிரிழந்த குழந்தைகளையும் தான் சிறப்பாக நினைவுகூர்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
இத்திங்கள் பிற்பகல் 3 மணியளவில் Oklahoma நகரின் தென் பகுதியிலும், Moore என்ற இடத்திலும் 210 மைல் வேகத்தில் வீசிய சூறாவளியில் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டோரை தன் செபத்தில் நினைவுகூர்வதாக திருத்தந்தை இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Oklahoma பேராயர் Paul Coakley அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே இந்தத் தந்தியை அனுப்பியுள்ளார்.
இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் தான் மனதார வாழ்த்துவதாகவும், அவர்களுக்குத் தன் ஆசீரை வழங்குவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சூறாவளியில் இறந்தோரின் எண்ணிக்கை 100ஆக இருக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டாலும், இச்செவ்வாய் மாலையில் இறந்தோரின் எண்ணிக்கை 24 என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / NYTimes








All the contents on this site are copyrighted ©.