2013-05-21 15:28:41

முதுபெரும் தலைவர் Rahi : லெபனன் அரசியல்வாதிகள் ஆள்வதற்குத் தகுதியற்றவர்கள்


மே,21,2013. லெபனனில் தேர்தல் குறித்த சட்டத்தைக் கொண்டுவருவதற்கு ஆறு ஆண்டுகளாக விவாதித்துவரும் அந்நாட்டின் அரசியல்வாதிகள் இன்னும் ஒரு பொதுவான தீர்மானத்துக்கு வராமல் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று குறை கூறியுள்ளார் லெபனன் மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர் Mar Bisharah Al Rahi.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழும் மாரனைட் வழிபாட்டுமுறையின் மக்களைச் சந்தித்துவரும் முதுபெரும் தலைவர் Rahi கொலம்பியாவில் பேசியபோது லெபனன் அரசியல்வாதிகள் நேரத்தை வீணாக்கி வருகிறார்கள் என்று சொல்லி, அந்த அரசியல்வாதிகளைச் சாடினார்.
லெபனன் நாட்டின் வறுமைநிலை பற்றியும் குறிப்பிட்டு, வெளிநாடுகளில் வாழும் அம்மக்களின் உறவினர்கள் ஆண்டுதோறும் அனுப்புகின்ற 800 கோடி டாலர் நிதியுதவியால் அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழ்கிறார்கள் என்றும் கூறினார் முதுபெரும் தலைவர் Rahi.
கிறிஸ்தவரும் முஸ்லீம்களும் சமூக மற்றும் அரசியல்ரீதியாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருவதற்கு லெபனன் நாடு எப்போதும் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்து வந்தது. ஆயினும், 1975ம் ஆண்டுக்கும் 1990ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்நாட்டில் இடம்பெற்ற இரத்தம் சிந்திய உள்நாட்டுக் கலவரத்தால் அந்நாட்டின் நல்லிணக்க வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிரியா, இஸ்ரேல் ஆகிய இரண்டு வெளிநாட்டுச் சக்திகளே காரணம் என்று சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.