2013-05-21 15:22:54

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையிலும்கூட உண்மையான அதிகாரம் என்பது பிறருக்குச் சேவை செய்வதாகும்


மே,21,2013. இயேசு செய்ததைப் போல, கிறிஸ்தவருக்கு உண்மையான முன்னேற்றம் தன்னையே தாழ்த்திக் கொள்வதில் அமைந்துள்ளது என்று இச்செவ்வாய் காலை புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உண்மையான அதிகாரம் என்பது பணி செய்வதாகும் என்றும், திருஅவையில் அதிகாரப் போராட்டத்துக்கு இடமே கிடையாது என்றும் கூறிய திருத்தந்தை, இயேசு தமது பாடுகளைப் பற்றிப் பேசினார், ஆனால் அவரின் சீடர்களோ தங்களில் யார் பெரியவர் என்பது குறித்து விவாதிக்கத் தொடங்கினர் என இந்நாளின் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து தனது மறையுரையை வழங்கினார்.
திருஅவையில் அதிகாரப் போராட்டம் புதிது அல்ல, உண்மையில் அது இயேசுவோடு தொடங்கியது என்றும், திருஅவையில் அதிகாரப் போராட்டம் இருக்கவே கூடாது, ஏனெனில் இயேசு தமது எடுத்துக்காட்டுமூலம் நமக்குப் போதித்துள்ளது போல, உண்மையான அதிகாரம், பணிசெய்யும் அதிகாரம் என்றும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு மனிதருக்கு ஒரு வேலை கொடுக்கப்படும்போது அது பதவி உயர்வு என்று பேசுவது உலக மரபு, ஆனால் திருஅவையில் அந்த உயர்வு குறித்து நாம் பேசக் கூடாது, ஏனெனில் இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்டார், அவர் தாழ்த்தப்படுவதற்கு உயர்த்தப்பட்டார், இதுதான் உண்மையான உயர்வு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் உண்மையான அதிகாரம் என்பது பணி செய்வதாகும் என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும் என்பதற்காக இன்று நம் அனைவருக்காகவும் தான் செபிக்க விரும்புவதாகவும் மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய்க்கிழமை காலைத் திருப்பலியில், இந்தியப் பணிக்குழுவினர் உட்பட சீனம், ஜப்பானியம், வியட்நாம், இத்தாலியம் போன்ற மொழிகளின் வத்திக்கான் வானொலியின் பணியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், Focolare பக்த இயக்கத்தின் தலைவர், துணைத்தலைவர், வத்திக்கான் நிர்வாக அலுவலகத்தின் பணியாளர்கள், Civiltà Cattolica இதழின் இயக்குனர் இயேசு சபை அருள்பணி Antonio Spadaro போன்றோரும் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.