மே,20,2013. ஐஸ்லாந்து, வட அட்லாண்டிக் பெருங்கடலும், ஆர்ட்டிக் பெருங்கடலும் சங்கமமாகும்
இடத்தில் அமைந்துள்ள ஓர் அழகான தீவு நாடாகும். ஒரு இலட்சத்து மூவாயிரம் சதுர கிலோ மீட்டர்
பரப்பளவைக் கொண்ட இத்தீவு நாட்டில் ஏறக்குறைய மூன்று இலட்சத்து இருபதாயிரம் மக்கள் வாழ்கின்றனர்.
ஐஸ்லாந்து, உலகில் வளர்ந்த நாடுகளில் 13வது இடத்தில் இருக்கின்றது என்று இந்த 2013ம்
ஆண்டில் ஐ.நா. மனித முன்னேற்ற நிறுவனம் கணித்துள்ளது. இந்த ஐஸ்லாந்து நாட்டில் வன்முறைக்
குற்றங்கள் வெகு அரிதாக இடம்பெறுகின்றன, அது ஏன் என்ற கேள்விக்குறியோடு கடந்த வாரத்தில்
பிபிசியில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இன்று ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் நாடுகளில்
அதிர்ச்சிதரும் குற்றங்கள் இடம்பெறுவதை தொலைக்காட்சிகளில் காண முடிகின்றது. எகிப்தின்
சீனாய்ப் பாலைவனத்தில் 33 ஆயிரம் டாலர் பிணையல் தொகை கேட்டு எரிட்ரிய நாட்டு அகதி Philemon
Semere என்பவர் கடந்த ஏழு மாதங்களாகக் கடுமையாகச் சித்ரவதை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அடி உதை, மின் அதிர்ச்சி, தீச்சூடு என, பலத்தக் காயங்களுடன் அவர் மரணத்தின் விளிம்பைத்
தொட்டுவிட்டு உயிர் பிழைத்து வந்திருக்கிறார். சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து
தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையில் 15 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாகியுள்ளனர்
மற்றும் 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அந்நாட்டின் சண்டையால் துருக்கியிலும்
பதட்டநிலைகள் உருவாகியுள்ளன. ஹெஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலால் இஸ்ரேலும் சிரியாச்
சண்டையில் தலையிடவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது என இத்திங்கள் காலைச் செய்திகள் கூறுகின்றன.
குற்றங்கள் குறித்த
அனைத்துலக புள்ளிவிபர நிறுவனம்கூட, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ்,
இரஷ்யா, ஜப்பான், தென்னாப்ரிக்கா, கானடா, இத்தாலி, இந்தியா என, உலகில் அதிகமான குற்றங்கள்
இடம்பெறும் 10 நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. அப்படியிருக்க ஐஸ்லாந்தில் மட்டும் குற்றங்கள்
இடம்பெறுவது வெகு அரிது என்றால் அதற்கான காரணம் என்ன என்று அச்செய்தியை மேலும் வாசித்தோம்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் சட்டம் படிக்கும் Andrew Clark என்பவர் ஐஸ்லாந்து நாட்டில்
தனக்குக் கிடைத்த அனுபவத்தை அச்செய்தியில் பகிர்ந்து கொண்டுள்ளார். நான் பாஸ்டனில்,
Suffolk University Law Schoolலில் அனைத்துலகச் சட்டங்கள் பற்றிப் படிக்கிறேன். இணையதளக்
குற்றங்கள் மற்றும் ஜெனீவா ஒப்பந்தம் குறித்த தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதுகிறேன்.
நான் ஐஸ்லாந்து நாட்டுக்குச் சுற்றுலாச் செல்வதற்கு முன்னரே எனது ஆய்வுக் கட்டுரைக்கான
தலைப்பைச் சமர்ப்பித்துவிட்டேன். ஆனால் ஒரு வாரம் நான் ஐஸ்லாந்தில் தங்கியிருந்த பின்னர்
குற்றங்கள் குறித்த எனது கண்ணோட்டமே மாறிவிட்டது. வன்முறைக் குற்றங்கள் இந்நாட்டில் இல்லை.
மக்கள் தங்கள் பாதுகாப்புக் குறித்து கவலையின்றி உள்ளனர். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு நிறுவனம் 2011ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில்,
ஐஸ்லாந்தில் 1999ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒரு இலட்சத்துக்கு
1.8 என்ற விகிதத்துக்குமேல் கொலைகள் நடந்ததில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 2009ம்
ஆண்டில் பிரேசிலில் 43,909, அமெரிக்க ஐக்கிய நாட்டில் 15,241, பிரிட்டனில் 724, டென்மார்க்கில்
47 எனக் கொலைகள் இடம்பெற்றன. அதே ஆண்டில் ஐஸ்லாந்தில் ஒரேயொரு கொலையே இடம்பெற்றுள்ளது.
இருந்தபோதிலும் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் அந்நாட்டில் ஏறக்குறைய 90
ஆயிரம் துப்பாக்கிகள் உள்ளன. அந்நாட்டில் குற்றங்கள் பெரிதாக உருவெடுக்கு முன்னரே காவல்துறை
அவற்றைக் களைந்து விடுகிறது..... இவ்வாறெல்லாம் வியப்புடன் பகிர்நது கொண்டுள்ள
Andrew Clark, ஐஸ்லாந்து நாட்டைப் பார்த்த பின்னர் தனது ஆய்வுக்கட்டுரையின் தலைப்பையே
மாற்றியதாகச் சொல்லியுள்ளார். மேலும், ஒரு நாள் ஐஸ்லாந்தின் தலைநகர் Reykjavik நகரில்
பனியில் தனது பையை இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாகச் சென்ற ஒரு வயதான
மனிதர் தனது காரை நிறுத்தி, காரில் ஏறுகிறாயா? என்று தன்னைக் கேட்டதாகவும், தெரியாத
ஒரு மனிதரின் காரில் எப்படி ஏறுவது என்று யோசித்துக் கொண்டே அந்தக் காரில் ஏறி அதன் பின்பக்க
இருக்கையில் அமர்ந்ததாகவும், ஆனால் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதாகவும்,
அந்த முதியவரும் புன்சிரிப்போடு உங்களது சுமைக்கு உதவி தேவையா? எனக் கேட்டதாகவும் ஆன்ட்ரூ
சொல்லியிருக்கிறார். இரண்டு சக்கர வாகனங்கள் சாலையில் பூட்டப்படாமலே வைக்கப்பட்டுள்ளன
என்பதை வியப்போடு சொல்லியுள்ள ஆன்ட்ரூ, மற்ற நாடுகள் பின்பற்றுவதற்கு ஐஸ்லாந்து நாட்டிடம்
நிறையக் காரியங்கள் இருக்கின்றன எனவும் கூறியிருக்கிறார். இலங்கையின் இறுதிக்கட்டப்
போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன
அழிப்பு நினைவு தினம் மே 18, கடந்த சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கையில்
சண்டை முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின்
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்கள் இன்னும் சம உரிமையுடன் வாழவில்லை, சொந்த இடங்களில்
சென்று மீண்டும் குடியேற முடியாமல் பலர் தவிக்கின்றனர். மனித உரிமைகளுக்கு எதிரானக் குற்றங்கள்
அந்நாட்டில் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்
நடந்துள்ள சூதாட்டம், நாட்டுக்கு அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது. இது
குறித்துப் பேசிய பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன், இச்சூதாட்ட ஊழல்களுக்கு வீரர்களின் பேராசையே
காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் இந்தச் சூதாட்டம் நடைபெறுவதாக புகார்
பதிவு செய்த டில்லி இன்ஸ்பெக்டர் பத்ரிஷ் தத், தனது மனைவியுடன் மர்மமான முறையில் இறந்து
கிடந்தார் என்று இத்திங்கள் காலை செய்தி கூறுகிறது. இத்தனைக்கும் இந்தச் சூதாட்டம் நடைபெற்றதாகவும்,
பெரிய அளவிலான தொகை கை மாறியதாகவும், சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அன்பு நேயர்களே, நாள்தோறும் ஊடகங்களில் இடம்பெறும் செய்திகளில் கணிசமான பகுதி, கொலை,கொள்ளை
பற்றியது என்றால், இன்னொரு கணிசமான பகுதி தற்கொலை பற்றியதாகவும் உள்ளது. ஏன் இப்படி மனிதர்கள்
கொலை, கொள்ளைகளுக்கு முந்திக்கொள்கின்றனர்! மனித உயிர்களை கண்இமைக்கும் நேரத்தில் சுட்டுப்பொசுக்குவதற்குச்
சக மனிதர்களே தயங்குவதில்லையே, ஏன்? ஐஸ்லாந்தில் மக்கள் வன்முறைக் குற்றங்களின்றி வாழும்போது
மற்றவர்களால் வாழ முடியாதா? வாழ முடியவில்லை. ஏனெனில் உலகில் பரவலாக மனிதர்களைப் பொருளாசை
அரித்துக் கொண்டிருக்கிறது. மன்னிக்கும் பெருந்தன்மை அவர்களில் அற்றுப்போய் வருகின்றது.
பொருளாசையாலும், மன்னிக்கும் மனம் இல்லாததாலும் விளைந்த கோபமே இவற்றுக்குக் காரணம் என்று
திருப்பூர் கிருஷ்ணன் சொல்கிறார். எதையும் தாங்கி வாழவேண்டும் என்கிற மனஉறுதி இல்லாததால்
தற்கொலைகள் நேர்கின்றன என்றும் அவர் சொல்கிறார். இன்றையப் புள்ளி விவரங்களும், இளம்வயதினர்தான்
அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர் என அறிவிக்கின்றன. ஒருசமயம் சுவாமி விவேகானந்தர்
காசியில் துர்கை கோவிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். திடீரென்று பத்துப் பதினைந்து
குரங்குகள் அவரைத் துரத்த ஆரம்பித்தன. சுவாமிஜி ஓடலானார். குரங்குகள் அவரை விரட்டிக்கொண்டு
வந்தன. அங்கே முதிய துறவி ஒருவர், விவேகானந்தரை நோக்கிக் குரல் கொடுத்தார்: 'ஓடாதீர்கள்.
நில்லுங்கள். குரங்குகளை நோக்கித் திரும்புங்கள். அவற்றைப் பார்த்தவாறே உறுதியுடன் அவற்றை
நோக்கி முன்னேறுங்கள். இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்!’ என்று. சுவாமிஜி நின்றார்.
குரங்குகளை நோக்கி நடக்கத் தொடங்கினார். குரங்குகள் திகைப்படைந்தன. மெல்லப் பின்வாங்கின.
பிறகு அச்சத்தோடு ஓடி, மறைந்தே போய்விட்டன. பல்லாண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வை நினைவுகூர்ந்த
சுவாமிஜி சொன்னார்: 'துன்பங்களும் பிரச்சனைகளும் குரங்குகள் போன்றவை. பிரச்சனைகள், அடிப்படையில்
கோழைகள். பயந்து ஓடினால் நம்மைத் துரத்தும். திரும்பி எதிர்கொண்டால், ஓடியே போய்விடும்
என்று. ஆம், அன்பு வத்திக்கான் வானொலி நெஞ்சங்களே, அன்பு இளையோரே! உலகில் எத்தனையோ
பேர், மகத்தான சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பிரச்சனையே இல்லாத
வாழ்க்கை அருளப்பட்டதா என்ன? கண் பார்வை, கேட்கும் திறன், வாய் பேசுவது ஆகிய மூன்றையுமே
பிறவியிலேயே இழந்த ஹெலன்கெல்லர் சாதிக்காத சாதனைகளா? வறுமை எதற்குமே தடையில்லை என்பதை
நிரூபித்திருக்கும் பெங்களூரு இளைஞர் சிவகுமார் பற்றிக்கூட கடந்த வியாழனன்று ஒரு செய்தி
வெளியாகியிருந்தது. 5வது வயதில் வீடு வீடாகச் சென்று தினத்தாள் போடும் சிறுவனில் இருந்து,
தற்போது நாட்டின் உயர்கல்வி நிலையங்களில் முதன்மையானதாகப் போற்றப்படும் ஐஐஎம் கொல்கட்டாவில்
(Indian Institute of Management Calcutta) படிக்கவிருக்கும் மாணவராக அவர் உயர்ந்துள்ளார்.
தினத்தாள் போடத் துவங்கி, அதில் வரும் பணம் போதுமானதாக இல்லாததால், மொத்தமாகத் தினத்தாள்களை
வாங்கி அவற்றைச் சில்லறையாக விற்கும் விற்பனையாளராக மாறி அந்த வேலையின்மூலம் தனது குடும்பத்துக்குத்
தேவையான பணத்தையும், கல்விக்கான செலவையும் சமாளித்து வந்தவர் சிவகுமார். எனவே, அன்பர்களே,
சொந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குப் பயந்து அடுத்தவரைத் துன்பங்களுக்கு உள்ளாக்குவது,
அப்பாவிகள்மீது வன்முறைகளை வாரி வீசுவது கோழைகளின் செயல்களாகும். அதனால், முதலில் நமது
மனங்களில் எழும் வன்முறை உணர்வுகளை எதிர்த்து நின்று அவற்றைப் பாச உணர்வுகளாக மாற்றுவோம்.
சோதனைகளைச் சாதனைகளாக்கும் இரும்பு மனத்தை உருவாக்குவோம். சுதந்திரப் பறவைகளாகச் சிறகுகள்
விரிப்போம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பது போன்று, பிறரது வாழ்வில் தலையிடத்
தூண்டும் சோதனைகளைத் தவிர்த்து வாழ்வோம்.