2013-05-20 16:54:19

திருத்தந்தை: செபத்தின் வழி புதுமைகள் இடம்பெறும்


மே 20, 2013. விசுவாசத்துடன் நாம் தொடர்ந்து செபிக்கவேண்டும், அவ்வாறு செபிப்பதன் மூலம் புதுமைகள் இடம்பெறும் என்பதை உறுதியாக நம்பவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்களன்று காலை மார்த்தா இல்லத்தில் வத்திக்கான் வானொலியின் ஒரு குழு உட்பட, திருப்பீடப்பணியாளர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, செபத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் மனைவியின் உடல் நலத்திற்காக செபிக்க கோவிலுக்கு இரவில் வந்த ஒருவர், கோவில் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு இரவு முழுவதும் வெளியிலேயே நின்று செபித்துவிட்டு, காலையில் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் மனைவி, மருத்துவர்களுக்கும் விளக்கம் சொல்லத் தெரியாத வகையில் அற்புதவிதமாகக் குணமாகியிருந்தார் என்ற நிகழ்வைப்பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, செபங்கள் மூலம் இத்தகையப் புதுமைகள் இடம்பெறுகின்றன என்றார்.
நம் ஒவ்வொருவருடையசெபங்களும் உறுதியுடையதாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும் இருக்கவேண்டும் என உரைத்ததிருத்தந்தை பிரான்சிஸ், நகரைக் காப்பதற்காகஇறைவனை நோக்கி விண்ணப்பித்துப் போராடியஆபிரகாம், மற்றும் சோர்வுற்று இருந்தாலும் கைகளை வானோக்கி உயர்த்தி செபித்தமோசே போன்றோரை உதாரணமாகஎடுத்துரைத்தார்.
'இறைவா நான் உம்மை நம்புகிறேன். என் நம்பிக்கையின்மையை அகற்ற உதவியருளும்' என இறைவனை நோக்கி வேண்டும் நாம், போரால் துன்புறுவோர், அகதிகள் போன்ற எண்ணற்ற துன்புறும் மக்களுக்காக செபிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
இதற்கிடையே, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில், ‘தூய ஆவியானவர் நம்மை மாற்றி புதுப்பிப்பதோடு, இணக்க வாழ்வையும் ஒன்றிப்பையும் உருவாக்கி, நம் மறைப்பணிகளுக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறார்' என எழுதியுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.