2013-05-20 15:55:48

கற்றனைத்தூறும்..... சன்ஸ்ட்ரோக்


கடும் வெயிலின் தாக்குதல், சன்ஸ்ட்ரோக், வெப்பக் காய்ச்சல் (thermic fever), கடுங்கதிர்வீச்சு (siriasis) ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றது. வெப்பநிலையைத் தாங்கும் சக்தியை உடல் இழக்கும்போதும், வெப்பமான சூழல்களில் வேலை அல்லது உடற்பயிற்சி செய்யும்போதும், போதுமான திரவப்பொருள்களைக் குடிக்காமல் இருக்கும்போதும் சன்ஸ்ட்ரோக் ஏற்படுகின்றது. வெயிலின் தாக்கம் நேரடியாக தலையைத் தாக்கும்போது மயக்கம், தலைச்சுற்றல் ஏற்படும். அதேநேரத்தில் உடலில் நீர்ச்சத்தும் குறைந்து சன்ஸ்ட்ரோக் எற்பட்டு மரணம்கூட ஏற்படும். தாகத்தைக் கட்டுப்படுத்தத் தேவைக்கு ஏற்ப தண்ணீர்க் குடிக்காவிட்டால், இதயநோய், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிக்கல் அதிகமாகும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உப்புச்சத்தின் அளவு மாறுபட்டு சிறுநீரகப் பாதிப்புகளை ஏற்படுத்தும். சிறுநீர்ப் பாதையில் எரிச்சல் ஏற்பட்டுச் சிரமப்படுத்தும். இதற்குச் சிறந்த மருந்து தண்ணீர்தான். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர்க் குடித்தாலே, நீர்க்கடுப்பு உட்பட சிறுநீர் பாதிப்புகளைத் துரத்திவிடலாம். வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளுக்கு அம்மை, வாந்திபேதி, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்காமல் இருப்பதும், குளிர்ந்த தண்ணீர், ஐஸ்கிரீம், குளிர்பானம் போன்றவற்றை முடிந்தவரைத் தவிர்ப்பதும் நல்லது. இவ்வாறு மருத்துவர்கள் சில ஆலோசனைகளைப் பரிந்துரைக்கின்றனர். மேலும், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் இரமணன் சொல்கிறார் : “கோடை காலத்தின் சூழ்நிலையைப் பொறுத்துத்தான் பருவகால மாற்றம் உண்டாகிறது. கோடை வெயிலே இல்லாவிட்டால், மழையே கிடையாது. பருவமழை பெய்வதற்கான சக்தி கோடையில்தான் கிடைக்கிறது. இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, அவ்விடங்களைக் கான்கிரீட் கட்டடங்களாக மாற்றிவருவதுதான் கடுமையான வெயிலுக்குக் காரணம். எனவே மரங்களை வளர்த்தாலே வெயிலின் தாக்கத்தைக் குறைக்கலாம்'' என்று. சன்ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்கவே வட இந்தியர்கள் தலையில் பெரிய தலைப்பாகைக் கட்டி இருக்கின்றனர்.

ஆதாரம் : இணையத்திலிருந்து







All the contents on this site are copyrighted ©.