2013-05-18 15:36:56

ஆயர் இம்மானுவேல் : இலங்கையின் வடக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தேவை


மே,18,2013. இலங்கையில் சண்டை முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கும் இவ்வேளையில், சண்டை மற்றும் பேரச்சமின்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று கொழும்புவின் துணை ஆயர் இம்மானுவேல் ஃபெர்னான்டோ கூறினார்.
இலங்கையின் அந்தக் கொடூரமானச் சண்டையின் புண்கள் ஆறுவதற்கு ஆரம்பித்துள்ளதா? என்ற வத்திக்கான் வானொலியின் கேள்விக்குப் பதிலளித்த ஆயர் இம்மானுவேல் இவ்வாறு கூறினார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற சண்டையின் குணமாகாத காயங்கள் பற்றிச் சொல்லவேண்டுமெனில், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் இன்னும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குப் போக முடியாமல் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சிலவேளைகளில் இராணுவம் அவர்களின் நிலங்களைக் கைப்பற்றி வைத்திருப்பதும், இன்னும் பிற காரணங்களும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குப் போக முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்று ஆயர் இம்மானுவேல் தெரிவித்தார்.
இறுதிக்கட்டப் போர் நடந்த பகுதியில் ஒரு கிராமத்தை அண்மையில் சில ஆயர்களுடன் தான் பார்வையிட்டது குறித்துப் பேசிய ஆயர் இம்மானுவேல், அங்கு ஒரு கத்தோலிக்க ஆலயம் தரை மட்டமாகியுள்ளது, பல வீடுகள் பெருமளவில் சேதமாகியுள்ளன என்று கூறினார்.
வடக்கில் இராணுவம் நிர்வாகம் செய்வதைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மிகவும் தேவைப்படுகின்றது என்றும் கொழும்புவின் துணை ஆயர் இம்மானுவேல் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.