2013-05-17 16:40:22

பேராயர் சுள்ளிக்காட் : மனித வியாபாரத்தின் வடு


மே,17,2013. மனிதர்கள் வியாபாரம் செய்யப்படுவது, வெறுப்புக்குரிய மற்றும் அறநெறிக்கு முரணான நடவடிக்கை என்று உலக சமுதாயம் முழுவதும் ஒட்டுமொத்தமாக கண்டனம் செய்ய வேண்டும், அதேநேரம், அவ்வியாபாரத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்.
நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் இவ்வாரத்தில் நிறைவடைந்த மனித வியாபாரம் குறித்த இரண்டு நாள் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், மனித வியாபாரத்தை ஒழிப்பதற்கு அனைத்துலக சமுதாயம் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுமாறு வலியுறுத்தினார்.
மனித வியாபாரத்தின் ஓர் அங்கமாக பெண்களும் சிறாரும் பாலியல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அவர்களின் மனித மாண்பை அவமதிப்பதாகும் என்றும் பேராயர் சுள்ளிக்காட் கூறினார்.
மனித வியாபாரத்திற்குப் பலியாகும் மக்களில் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறிய அவர், உலகெங்கும் மனித வியாபாரத்திற்குப் பலியாகும் மக்களுக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளையும் குறிப்பிட்டார்.
மேலும், சிரியாவில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமுதாயம் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஐ.நா. கூட்டத்தில் கேட்டுக்கொண்டார் பேராயர் சுள்ளிக்காட்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.