2013-05-17 16:36:14

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையின் கனிவு உலகுக்குத் தேவைப்படுகின்றது


மே,17,2013. திருஅவையின் இன்றியமையாத அங்கமாக விளங்குகின்ற பிறரன்பு, திருஅவையில் அன்பை நிறுவனமாக்குகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் Oscar Andrés Rodríguez Maradiaga மற்றும் காரித்தாஸ் நிறுவனப் பணியாளர்களை இவ்வியாழனன்று சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, பிறரன்பு இல்லாமல் திருஅவை இயங்க முடியாது என்று கூறினார்.
காரித்தாஸ் நிறுவனத்தின் இரு கூறுகளான செயல்கள் மற்றும் விண்ணகத்தன்மை குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், போர் அல்லது நெருக்கடி காலங்களில் அவசரகால உதவிகளைச் செய்வது மட்டுமல்ல, அதற்குப் பின்னும் பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது காரித்தாஸின் பணி என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருஅவை தனது மக்களுக்கு, தாய்த் திருஅவை தனது குழந்தைகளுக்குத் தனது கனிவையும் பற்றையும் காட்டும் நிறுவனமாக காரித்தாஸ் அமைந்துள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, ஓசியானியா ஆகிய பகுதிகளின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் பசியை ஒழிப்பதற்கு உறுதி எடுத்துள்ளதைத் திருத்தந்தையிடம் தெரிவித்தார் கர்தினால் Rodríguez Maradiaga.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.