2013-05-17 16:43:14

அனைத்துலகத் தொலைத்தொடர்பு தினம், ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி


மே,17,2013. இவ்வாண்டு அனைத்துலகத் தொலைத்தொடர்பு தினம் சாலை பாதுகாப்பு குறித்துச் சிந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளவேளை, போக்குவரத்துக்களில் இடம்பெறும் விபத்துக்களைத் தடுப்பதற்குத் நவீனத் தொழில்நுட்பங்களை நன்றாகப் பயன்படுத்துவோம் எனக் கூறியுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
இவ்வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலகத் தொலைத்தொடர்பு தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன், ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் ஏறக்குறைய 13 இலட்சம் பேர் இறக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
சாலை விபத்துக்களால் மேலும் இலட்சக்கணக்கானோர் காயமடைகின்றனர் மற்றும் ஆயுள் முழுவதும் மாற்றுத்திறனாளிகளாகி விடுகின்றனர், இந்நிலை குடும்பங்கள் மற்றும் நாடுகளில் பெரும் பொருளாதாரப் பளுவைச் சுமத்துகின்றன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
சாலைப் பாதுகாப்புக் குறித்தத் தொழில்நுட்பங்களும் தகவல்களும் தேவைப்படுகின்றன என்றும் அச்செய்தி வலியுறுத்தியுள்ளது.
2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான சாலைப் பாதுகாப்பு குறித்த ஐ.நா.வின் பத்தாண்டு திட்டம், உலகில் சாலைகள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்புக்கு உதவி செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
1969ம் ஆண்டு மே 17ம் தேதியன்று அனைத்துலகத் தொலைத்தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதை நினைவுப்படுத்தும் விதமாக இத்தினம் தொடங்கப்பட்டது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.