2013-05-16 16:46:14

பன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


மே,16,2013. தற்போது மனிதரிடையே நிலவும் கண்ணோட்டம், தனி மனிதர்களை நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாகக் கருதுவதற்கும், நம் தேவை முடிந்தபின் அம்மனிதர்களைத் தூக்கி எறிவதற்கும் தூண்டுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
Kyrgyzstan, Antigua மற்றும் Barbados, Luxembourgன் Grand Duchy, மற்றும் Botswana ஆகிய நாடுகளின் தூதர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, மனித வரலாற்றில் தற்போது உருவாகியுள்ள முன்னேற்றங்களையும் குறைபாடுகளையும் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய காலக்கட்டத்தில் உலகெங்கும் நிலவும் பொருளாதாரச் சரிவின் தாக்கத்தால், மனித உயிர்களையும் நுகர்பொருள் போன்று கருதும் போக்கு வளர்ந்து வருகிறது என்ற தன் கவலையை வெளியிட்டார் திருத்தந்தை.
பணத்தையும், அதிகாரத்தையும் முக்கியமற்றதாக்கி, மனிதரை முன்னிலைப்படுத்தும் நன்னெறியையும், அத்தகைய எண்ணங்களுக்கு அடித்தளமாக அமையும் இறைவனையும் ஒதுக்கும் போக்கு ஆபத்தானது என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
திருப்பீடத்துடன் நல்லுறவை வளர்க்க விரும்பும் நான்கு நாடுகளின் அரசுத் தலைவர்களையும், அவர்கள் குடும்பங்களையும், நாட்டினர் ஒவ்வொருவரையும் தான் அசீர்வதிப்பதாக திருத்தந்தை தன் உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.