2013-05-16 16:51:33

தூய ஆவியாரின் பெருவிழாவன்று அனைத்து சபைகளும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கொண்டாடவிருக்கும் நிகழ்ச்சிகள்


மே,16,2013. கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஏனைய கிறிஸ்தவ சபைகளுக்கும் பொதுவாக அமைந்துள்ள நற்செய்தியின் மகிழ்வை இந்த நம்பிக்கை ஆண்டில் அனைவரும் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேமாதம் 19ம் தேதி, வருகிற ஞாயிறன்று கொண்டாடப்படும் தூய ஆவியாரின் பெருவிழாவன்று கிறிஸ்தவ நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அனைத்து சபைகளும் ஒன்றிணைந்து வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கொண்டாடவிருக்கும் நிகழ்ச்சிகளை புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella செய்தியாளர்களிடம் இப்புதனன்று விளக்கிக் கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிகழ்ந்ததன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில், அப்பொதுச்சங்கம் உருவாக்கிய ஒன்றிப்பு உணர்வை மீண்டும் கொண்டாட, தூய ஆவியாரின் விழா ஒரு தகுந்த தருணம் என்பதையும் பேராயர் Fisichella எடுத்துரைத்தார்.
150 சபைகளைச் சேர்ந்த 1,20,000க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளவிருக்கும் இந்த நிகழ்வு, தூய ஆவியாரின் பெருவிழாவுக்கு முந்தைய நாள் சனிக்கிழமை நடைபெறும் திருப்பயணத்துடன் துவங்குகிறது.
"நான் நம்புகிறேன். என் நம்பிக்கையை அதிகமாக்கும்" என்ற கருத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் அனைவரும், சனிக்கிழமை காலை 7 மணி முதல், பிற்பகல் 3 மணி முடிய புனித பேதுரு பசிலிக்காவின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் புனித பேதுருவின் கல்லறையைச் சென்று பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருக்கும் பயணிகள் அனைவரோடும் ஒரு செப வழிபாட்டில் கலந்து கொள்வார்.
ஞாயிறு காலை பத்து மணிக்கு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றும் திருப்பலியுடன் தூய ஆவியாரின் பெருவிழா நிகழ்வுகள் நிறைவு பெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.