2013-05-15 17:36:00

வெனிஸ் நகரில் நடைபெறும் அகில உலக கலைக் கண்காட்சியில் திருப்பீடமும் பங்கேற்கும் - வத்திக்கான் உயர் அதிகாரி


மே,15,2013. இவ்வாண்டு ஜூன் மாதம் 1ம் தேதி முதல், நவம்பர் மாதம் 24ம் தேதி முடிய இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறவிருக்கும் 55வது அகில உலக கலைக் கண்காட்சியில் திருப்பீடமும் பங்கேற்கும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை வெனிஸ் நகரில் நடைபெறும் இந்த அகில உலக கலைக் கண்காட்சியில், திருப்பீடத்தின் சார்பில் உருவாக்கப்படும் கலைப் படைப்புக்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
'தொடக்கத்தில்' என்ற வார்த்தையைத் தலைப்பாகக் கொண்டு, விவிலியத்தின் முதல் நூலான தொடக்க நூலின் முதல் 11 பிரிவுகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் கலைப் படைப்புக்கள், இந்த கண்காட்சியில் வைக்கப்படும் என்று கர்தினால் Ravasi கூறினார்.
மிலான் நகரில் திருப்பீடம் தெரிவு செய்துள்ள Studio Azzuro என்ற கலை நிறுவனம், தன் புகைப்படங்கள், கணனிவழி ஓவியங்கள் வழியாக இந்தப் படைப்புக்களை உருவாக்கும் என்றும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : Zenit / VIS








All the contents on this site are copyrighted ©.