2013-05-15 16:50:00

மே 16, 2013. கற்றனைத்தூறும்......... காகிதம் உருவான வரலாறு


மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விடயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையைத் தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டபோது தோன்றியதுதான் எழுத்து. அன்றைய ஆதிமனிதர் முதன் முதலில் எழுத்துக்களை பதித்து வைத்தது கற்களின் மீதுதான். எழுதப்பட்ட கற்களை தேவை ஏற்பட்டபோது ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளின் மீதும் களிமண் தகடுகளின் மீதும் மனிதர் எழுதத் துவங்கினர்.
கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த, இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் பாப்பிரஸ் ஆகும். இந்தப் பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுப்பகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களைச் சேர்த்து பதப்படுத்தி, பின்பு அதனை சூரிய ஒளியில நன்றாக உலரவைத்து, அதனை எழுதுவதற்கென்று பயன்படுத்தி வந்தனர் அன்றைய எகிப்தியர்கள். இதுதான் மனிதர் முதன் முதலில் காகிதத்தில் எழுதிய அனுபவம் ஆகும்.
பண்டைய சீனாவில் கி.மு.206-ஆம் ஆண்டு முதல் கி.பி.220-ஆம் ஆண்டுவரை சங்கனை (Changan) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்த ஹான் வம்சத்தினர் (Han Dynasty) காலத்தில் நீதிமன்ற ஆவணக் காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் கைய் லுன் (Cai Lun).
இவர், கி.பி. 105-ல் மரநார்கள், தாவரத்தின் இலைகள், மீன்பிடி வலைகள், மற்றும் துணிக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு காகிதம் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார். இம்முறையில் கண்டறியப்பட்ட காகிதம் சற்று தடிமனாக இருந்தது, அதாவது ஏறத்தாழ 5 மி.மீ. வரை தடிமனாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு கைய் லுன் தற்செயலாக ஒரு காட்சியைக் காண நேரிட்டது. ஒரு வகை குளவி (Wasp) மரத்தை துளையிட்டு, அதன் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களை கொண்டு தனது கூட்டை வலிமையாக கட்டிக்கொள்வதை கண்டார், அப்போதுதான் மரத்தைக் கூழாக அரைத்தால் காகிதத்தை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, மரத்தை அரைக்கும் ஆலை நிறுவப்பட்டு காகிதம் தயாரிக்கப்பட்டது. சீனர்கள் ஏறக்குறைய அத்தொழில்நுட்பத்தை 500 ஆண்டுகளுக்கும் மேலாக இரகசியமாகவே வைத்து பாதுகாத்துள்ளனர்.
கி.பி.751-ல் சீனர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே, கிர்கிஸ்தானுக்காக நிகழ்ந்த டாலஸ் போரில் (Battle of Talas) சீனப்படை, அரேபியப் படையிடம் தோல்வியை தழுவியது, அப்போது அரேபியர்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு சீனவீரர்களிடம் இருந்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அரேபியர்கள் அறிந்துகொண்டனர். அதன்பின், ஐரோப்பிய நாடுகளான இஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் பரவியது.
பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பேப்பர் கடும் நிறம் (கால்நடைகளின் சாண நிறம்) கொண்டதாகத்தான் இருந்தது, 1844-ஆம் ஆண்டு சார்லஸ் (Charles Fenerty) மற்றும் கெல்லர் (Gottlob Keller) ஆகியோர் இணைந்து வெள்ளை நிறக் காகிதத்தை உருவாக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தார்கள். நாம் வீணடிக்கும் ஒவ்வொரு காகிதத்திலும் ஒரு மரத்தின் உயிர் வீணடிக்கப்படுகிறது என்பதை மனதில் கொண்டு காகிதங்களை மிக சிக்கனமாக பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு நம்மாலான நன்மையைச் செய்திடுவோம்.







All the contents on this site are copyrighted ©.