2013-05-15 17:41:00

மாலியின் மறுசீரமைப்புக்கு ஐரோப்பிய நாடுகள் 52 கோடி யூரோக்கள் வழங்க திட்டம்


மே,15,2013 மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி, கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ்வாண்டு ஜனவரி மாதம் பிரான்ஸ் அரசு, மாலி அரசிற்கு உதவுவதற்காக தனது படைகளை அந்நாட்டிற்கு அனுப்பியது. இஸ்லாமியப் புரட்சியாளர்கள் கைப்பற்றியிருந்த தலைநகர் Bamako மற்றும் சில முக்கிய நகரங்களை பிரான்ஸ் அரசு மீட்டு, மாலி அரசிடம் ஒப்படைத்தது.
மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பின் இராணுவ வீரர்கள் உதவியுடன் நாட்டில் அமைதியை நிலைநாட்டி, வருகின்ற ஜூலை மாதம் தேர்தல் நடக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, மாலியின் வளர்ச்சி குறித்த ஒரு மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்றது.
சர்வதேச நன்கொடையாளர்களுடன் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில், மாலியின் மறுசீரமைப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் 52 கோடி யூரோக்கள் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அரசு அலுவலகங்களையும், இராணுவத்தையும் புதுப்பித்தல், பாழடைந்த கட்டமைப்பு வசதிகளை சீராக்குதல், அரசுத்தலைவர் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துதல், வடக்கில் உள்ள புரட்சியாளர்களுடன் அமைதியை நிலை நிறுத்துதல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துதல் போன்ற பல திட்டங்களுக்கு உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாலி நாட்டின் அரசுத்தலைவர் Dioncounda Traoré, இந்த உதவி ஒரு நல்ல ஆரம்பமாக விளங்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : Businessweek








All the contents on this site are copyrighted ©.