2013-05-15 17:05:44

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 15, 2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் மாதம் 19ம் தேதி திருஅவையின் இவ்வுலக தலைமைப்பதவியை ஏற்றது முதல், அவரின் புதன் பொதுமறைபோதகத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் கலந்துகொள்ளும் குழந்தைகளை அவர் வாரி அணைத்து முத்தமிடுவதால், குழந்தைகளை அழைத்துக்கொண்டு வரும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இப்புதனன்றும் காலை பொதுமறைபோதகத்தை வழங்கவந்த திருத்தந்தை, காரில் புனித பேதுரு வளாகத்தை ஒருவலம் வந்து, அங்கிருந்தவர்களை, குறிப்பாக குழந்தைகளைத் தொட்டு ஆசீர்வதித்துச் சென்றார். கத்தோலிக்க விசுவாச அறிக்கை குறித்து புதன்பொதுமறைபோதகங்களில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை, கடந்தவாரத்தின் தொடர்ச்சியாக இவ்வாரமும் தூய ஆவியானவர் குறித்த போதனைகளை வழங்கினார்.
அன்புச் சகோதர சகோதரிகளே, விசுவாச அறிக்கை குறித்த மறைபோதகத்தில் நாம், தூய ஆவி குறித்தும் அவரின் செயல்பாடுகள் குறித்தும் நோக்கி வருகிறோம். 'உண்மையின் ஆவியானவர்' என்றே தூய ஆவியை அழைத்தார் இயேசு (யோவான் 16:13). உண்மையைப்பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்படும் இக்காலக்கட்டத்தில், உண்மை உள்ளது என்பதை மட்டும் நாம் நம்பவில்லை, அது விசுவாசத்தின் வழியாக இறைமகன் இயேசுகிறிஸ்துவில் கண்டுகொள்ளப்படமுடியும் என்பதையும் விசுவசிக்கிறோம். தூய ஆவியானவர் நம்மை இயேசுகிறிஸ்துவிடம் கொண்டுவருகிறார். அவரே முழுத்திருஅவையையும் உண்மையின் முழுமை நோக்கி வழிநடத்திச் செல்கிறார். உயிர்த்த கிறிஸ்துவால் நம் உதவியாளராக அனுப்பிவைக்கப்பட்ட பரிந்துரையாளராம் தூய ஆவி, இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் குறித்து நமக்கு நினைவுறுத்துவதோடு, அவ்வார்த்தைகளின் மீட்பளிக்கும் உண்மைகள் குறித்து நமக்கு உணர்த்துகிறார். இயேசுகிறிஸ்துவில் நம் புதிய வாழ்விற்கான ஆதாரமாக இருக்கும் அவர், விசுவாசத்தின் இயல்புநிலை கடந்த உணர்வை நம் இதயங்களில் தட்டி எழுப்புகிறார். விசுவாசத்தின் அந்த இயல்புநிலைகடந்த உணர்வின் உதவியுடனேயே இறைவார்த்தையில் நாம் உறுதிப்பாடுடன் இருப்பதோடு, அதன் அர்த்தத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், புரிந்துகொண்டதை நம் தினசரி வாழ்வில் செயல்படுத்தவும் இயல்கிறது. தூய ஆவியின் வல்லமைக்குத் தன்னையே திறந்த அன்னைமரியைப்போல், நாமும் உண்மையிலேயே நம்மைத் திறந்தவர்களாகச் செயல்படுகிறோமா என நம்மிடமே கேள்வி எழுப்ப வேண்டும். இப்போதும் தூய ஆவியானவர், நம் இதயங்களில், தந்தை மற்றும் மகனோடு இணைந்து தங்குகிறார். அனைத்து உண்மையை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லவேண்டும் என தூய ஆவியை வேண்டுவோம். நம் தினசரி செபங்கள், விவிலிய வாசிப்புகள் மற்றும் திருவருட்சாதன கொண்டாட்டங்கள் வழியாக இயேசுகிறிஸ்துவுடன் நட்புணர்வில் நாம் வளர உதவுமாறு தூய ஆவியிடம் கேட்போம்.
இவ்வாறு, தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இத்தாலியின் சர்தேஞ்ஞா தீவுக்கு இவ்வாண்டு, தான் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளதையும் தெரிவித்து அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
'இறைவனே வாழ்வை வழங்குகிறார். மனித வாழ்வை மதித்து அன்புகூர்வோம், குறிப்பாக தாயின் வயிற்றில், தன்னையே காத்துக்கொள்ள இயலா நிலையிலுள்ள உயிர்களை' என தன் டுவிட்டர் பக்கத்தில் புதனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.







All the contents on this site are copyrighted ©.