2013-05-15 17:39:07

குழந்தைகளைத் தாக்கும் நோய் கிருமிகளை அழிக்கும் விலை குறைவான ஒரு மருந்தை இந்தியா கண்டுபிடித்துள்ளது


மே,15,2013. உலகின் பல நாடுகளிலும் குழந்தைகளைத் தாக்கும் நோய் கிருமிகளை அழிக்கும் ஒரு மருந்தை விலை குறைவான வழியில் உருவாக்கும் முறையை இந்தியா கண்டுபிடித்துள்ளது.
சுத்தமற்ற சூழலில் வாழும் இலட்சக்கணக்கான குழந்தைகள், வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் நீரற்று போகும் நிலை ஆகிய குறைபாடுகளால் ஆண்டுதோறும் இறக்கின்றனர். இத்தகையச் சூழல் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
இக்குறையைத் தடுக்கும் Rotavac என்றழைக்கப்படும் மருந்தை 54 ரூபாய் விலை அளவில் உருவாக்கும் வழிகளை இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள Bharat Biotech என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இதே போன்ற தடுப்பு மருந்தை பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களான GlaxoSmithKline மற்றும் Merck போன்ற நிறுவனங்கள் 1000 ரூபாய் என்ற விலை அளவில் விற்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இந்நோயினால் இறக்கின்றனர் என்றும், விலை மலிவான இந்த மருந்தால், பல இலட்சம் குழந்தைகளின் உயிர்களைக் காக்க முடியும் என்றும், இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி Vijay Raghavan செய்தியாளர்களிடம் கூறினார்.
Rotavac மருந்தைத் தயாரிக்கும் உரிமம் இன்னும் எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் இந்த நிறுவனத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்தை தஙகளால் பெரிய அளவில் தயாரிக்க முடியும் என்று Raghavan கூறினார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.