2013-05-14 16:15:11

திருத்தந்தை பிரான்சிஸ் : அன்பு செய்யக்கூடிய பரந்த இதயம் நமக்குத் தேவை


மே,14,2013. அன்பு செய்யக்கூடிய பரந்து விரிந்த பெரிய இதயம் நமக்குத் தேவை என்றும், எந்நிலையிலும் தன்னலத்தோடு நடப்பதை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன்னலத்தோடு வாழ்பவர்கள், யூதாஸ் போல, அன்பு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதில்லை, அவர்கள் மறுதலிப்பவர்கள், தனித்துவிடப்படுபவர்கள் மற்றும் தனிமையில் வாழ்பவர்களாக மாறுகிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாளின் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து, அன்புப் பாதைக்கும், தன்னலத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடுகள் குறித்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், நாம் உண்மையிலேயே இயேசுவைப் பின்செல்ல விரும்பினால், வாழ்வை, பிறருக்குக் கொடையாக வழங்கும் விதத்தில் வாழவேண்டும், அதை நமக்குள்ளே வைத்துக்கொள்ளும் புதையலாக வாழக் கூடாது என்றும் கூறினார்.
தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என்ற இயேசுவின் வார்த்தைகளையும் குறிப்பிட்ட திருத்தந்தை, கொடை என்பதன் பொருளை யூதாஸ் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை என்றும், இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு தன்னல எண்ணத்தில் யூதாஸ் வளர்ந்தார் என்றும் கூறினார்.
தன்னலத்தில் மனச்சான்றை தனிமைப்படுத்துபவர்கள் இறுதியில் எல்லாவற்றையும் இழந்துவிடுவார்கள் என்று எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ், பணத்தோடு பற்றுக்கொண்டிருந்த, பணத்தை வணங்கிய யூதாசும் தனது வாழ்வை இழப்பிலே முடித்தார் என்று உரைத்தார்.
இந்நாள்களில் தூய ஆவியின் விழாவுக்காக காத்திருக்கும் நாம், வாரும் ஆவியே, மனத்தாழ்மையுடன் அன்பு செய்யும் பெரிய, பரந்து விரிந்த இதயத்தை எமக்குத் தாரும் எனக் கேட்போம் எனக் கூறி, தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய்க்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில், வத்திக்கான் அருங்காட்சியகத்தின் சில பணியாளர்களும், பாப்பிறை போர்த்துக்கீசிய கல்லூரியின் சில மாணவர்களும் கலந்துகொண்டனர். Medellín பேராயர் Ricardo Antonio Tobón Restrepo, திருத்தந்தையோடு சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிகழ்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.