2013-05-14 16:17:00

உலகில் பசிக் கொடுமையை ஒழிக்க பூச்சி உற்பத்தியைப் பெருக்கலாம், ஐ.நா.


மே,14,2013. உலகளவில் பசிக்கொடுமையை ஒழிப்பதில் மனிதர்கள் சாப்பிடக்கூடிய பூச்சிகள் எதிர்காலத்தில் ஆற்றக்கூடிய பங்களிப்பு குறித்து FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய நூல் விளக்கியுள்ளது.
ஏற்கனவே 200 கோடி மக்கள் தங்களது உணவில் வெட்டுக்கிளி, வண்டு, எறும்பு உட்பட பல பூச்சிகளைச் சேர்த்துக் கொள்வதாகக் கூறும் இப்புதிய நூல், பெரிய அளவில் பண்ணைகள் வைத்து பூச்சிகளை உற்பத்தி செய்வது வருங்காலத்தில் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கும் என்றும் கூறுகிறது.
வேகமாக இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட பூச்சிகளிடம், புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் மற்றும் கால்நடைகளின் உணவாகவும் இவை பயன்படும் வாய்ப்புள்ளது என்றும் அந்நூல் தெரிவிக்கிறது.
சீனா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில் சில உணவு விடுதிகளில் இவை அபூர்வப் பொருளாக பரிமாறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : FAO








All the contents on this site are copyrighted ©.