2013-05-13 16:56:27

புனிதர்பட்ட திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


மே,13,2013. முத்திப்பேறுபெற்ற Antonio Primaldo மற்றும் அவரோடு சேர்ந்த 800 மறைசாட்சிகள், முத்திப்பேறுபெற்ற Laura Montoya, முத்திப்பேறுபெற்ற Maria Guadalupe García Zavala ஆகியோரை இஞ்ஞாயிறன்று புனிதர்கள் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பலியை இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிகழ்த்தியதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பலபகுதிகளில் இன்றும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் மக்கள், தீமைகளுக்கு நன்மையால் பதிலுரை வழங்க தேவையான மனவுறுதியை இறைவன் வழங்கவேண்டும் என இறைஞ்சுவோம் என தன் மறையுரையின்போது குறிப்பிட்டார்.
நம் கிறிஸ்தவ சமூகங்களையும் இதயங்களையும் சுயநலக் கோட்பாடுகள் அரித்துச் செல்கின்றன என்ற திருத்தந்தை, நோயாளிகள், ஏழைகள் மற்றும் இறக்கும்தருவாயில் இருப்போரைத் தொட்டு பணியாற்றுவது என்பது இயேசுவின் உடலையேத் தொடுவதற்கு ஒப்பாகும் என்றார்.
பிறரன்பின் சாட்சியங்கள் இல்லாதமறைசாட்சியவாழ்வுகூடகிறிஸ்தவசுவையை, அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடும் எனவும் கூறினார் திருத்தந்தை.
முத்திப்பேறுபெற்ற Antonio Primaldo மற்றும் அவரோடு சேர்ந்த 800 மறைசாட்சிகளும் இசுலாமுக்கு மதம் மாற மறுத்ததால் 1480ம் ஆண்டில் தென் இத்தாலியில் Otranto என்ற சிறிய துறைமுக நகரில் ஒட்டமான் படைகளால் கொல்லப்பட்டவர்கள்.
கொலம்பிய நாட்டின் முத்திப்பேறுபெற்ற Laura Montoya, அந்நாட்டின் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். இவர் கொலம்பியாவின் முதல் புனிதராகிறார்.
மெக்சிகோ நாட்டு முத்திப்பேறுபெற்ற Maria Guadalupe García Zavala, புனித மார்கிரேட் மேரி மற்றும் ஏழைகளின் பணியாளர் சபையைத் தோற்றுவித்தவர். இவர் தனது 85வது வயதில், 1963ம் ஆண்டு இறந்தார்.
இத்தாலி, கொலம்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள் புனிதர்கள் என அறிவிக்கப்பட்ட இத்திருப்பலியில், இத்தாலிய நீதித்துறை அமைச்சர் Anna Maria Cancellieri தலைமையில் 6 பேர், கொலம்பிய அரசுத்தலைவர் Juan Manuel Santos Calderon தலைமையில் 20 பேர், மெக்சிகோவின் சமய விவகாரத்துறையின் இயக்குனர் Roberto Herrera Mena தலைமையில் ஒரு குழுவினர் உட்பட பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.