2013-05-13 16:51:06

திருஅவையின் புள்ளிவிவரப்புத்தகம் வெளியிடப்பட்டது


மே,13,2013. உலகில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க மாற்றமின்றி, 121 கோடியே 40 இலட்சமாக இருப்பதாக இத்திங்களன்று திருப்பீடத்தில் வெளியிடப்பட்ட ஆண்டு புள்ளிவிவரப் புத்தகம் தெரிவிக்கிறது.
2010ம் ஆண்டில் 119 கோடியே 60 இலட்சமாக இருந்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டில் 121 கோடியே 40 இலட்சமாக உயர்ந்தது, 1.5 விழுக்காட்டு வளர்ச்சியைக் குறிக்கின்றது எனக் கூறும் திரு அவையின் புள்ளிவிவரம், இக்காலக்கட்டத்தில் உலக மக்கள்தொகை வளர்ச்சி 1.23 விழுக்காடாக இருந்தது எனவும் தெரிவிக்கிறது.
உலக மக்கள்தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 17.5 விழுக்காடாக உள்ளது. 2011ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, மொத்த கத்தோலிக்கர்களுள் 48.8 விழுக்காட்டினர் அமெரிக்கக்கண்டத்திலும், 23.5 விழுக்காட்டினர் ஐரோப்பாவிலும், 16 விழுக்காட்டினர் ஆப்ரிக்காவிலும், 10.9 விழுக்காட்டினர் ஆசியாவிலும், 0.8 விழுக்காட்டினர் ஓசியானியாவிலும் உள்ளனர்.
உலகில் கத்தோலிக்க ஆயர்களின் எண்ணிக்கை 2010ம் ஆண்டில் 5104 ஆக இருந்தது 2011ல் 5132 ஆகவும், குருக்களின் எண்ணிக்கை 2001ம் ஆண்டு இறுதியில் 4இலட்சத்து 5ஆயிரத்து 67ஆக இருந்தது 2011ம் ஆண்டு இறுதியில் 4இலட்சத்து 13ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நிரந்தர தியாக்கியோன்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது எனக்கூறும் இப்புள்ளிவிவர புத்தகம், பெண்துறவிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 10 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. 2001ம் ஆண்டு 7இலட்சத்து 92ஆயிரமாக இருந்த பெண் துறவறத்தாரின் எண்ணிக்கை 2011ம் ஆண்டில் 7 இலட்சத்து 13 ஆயிரமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, மறைமாவட்ட மற்றும் துறவுசபைகளின் குருத்துவக்கல்லூரிகளில் குருவாவதற்கு பயிற்சிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2001ம் ஆண்டு ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 244 ஆக இருந்தது 2011ம் ஆண்டில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 616 ஆக, அதாவது 7.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.