2013-05-11 15:45:20

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி


மே,11,2013. பிறரைப் புத்தம்புதிய கண்களோடு பார்க்கவும், இயேசுவில் அவர்களை எப்போதும் சகோதர சகோதரிகளாக நோக்கவும், அவர்கள் மதிக்கப்படவும் அன்புசெய்யப்படவும் வேண்டியவர்கள் என்று உணரவும் தூய ஆவி நமக்கு உதவி செய்கிறார்
இவ்வாறு இவ்வெள்ளிக்கிழமை இரவில் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், உரோம் Pio XI மருத்துவமனைக்கு இச்சனிக்கிழமை முற்பகலில் திடீரெனச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கர்தினால் Javier Lozano Barragánஐ சந்தித்து நலம் விசாரித்தார். அம்மருத்துவமனையின் பணியாளர்களையும் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை.
கடந்த சனவரி 26ம் தேதியன்று தனது 80வது வயதை நிறைவுசெய்த மெக்சிகோ நாட்டுக் கர்தினால் Barragán, திருப்பீட நலவாழ்வு அவையின் முன்னாள் தலைவராவார்.
இன்னும், இவ்வெள்ளிக்கிழமையன்று, CCEE என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் Peter Erdo மற்றும் அக்கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து பல விவகாரங்கள் குறித்து கலந்து பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமய சுதந்திரம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான சகிப்பற்றதன்மை உட்பட பல விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக அக்கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான Susy Hodges நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.