2013-05-11 15:42:48

திருத்தந்தை பிரான்சிஸ் : உண்மையான செபம் தேவையில் இருப்போருக்கு நம்மைத் திறக்க வைக்கின்றது


மே,11,2013. உண்மையான செபம், நம்மை நம்மிலிருந்து வெளியே வரச்செய்து வானகத்தந்தைக்கும் தேவையில் இருப்போருக்கும் நம்மையே வழங்க வைக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்” என்று இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய இந்நாளின் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் வார்த்தைகளைச் சிந்திக்கும்போது செபத்தில் ஒரு புதியகூறு தெரிகின்றது என்று கூறினார்.
தந்தை நமக்கு எல்லாவற்றையும் தருவார், ஆனால் அவற்றை எப்போதும் இயேசுவின் பெயரில்.. என்றுரைத்த திருத்தந்தை, தந்தையிடம் செல்லும் ஆண்டவர் விண்ணகத் திருத்தலத்தில் நுழைந்து கதவுகளைத் திறக்கிறார், அவற்றை எப்போதும் திறந்தே வைக்கிறார், ஏனெனில் அவரே கதவு மற்றும் அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்று கூறினார்.
பல நேரங்களில் செபத்தில் நமக்குச் சோர்வு ஏற்படுகின்றது, ஆண்டவரே, இதைக் கொடு, அதைக்கொடு என்று கேட்பது செபமல்ல, ஆனால் செபம் என்பது இயேசு தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசுவது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் பெயரால் தந்தையிடம் செபிப்பது நம்மிலிருந்து நம்மை வெளியே வரச் செய்கின்றது என்றும் கூறினார்.
இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில் வத்திக்கான் காவல்துறையினரும், அர்ஜென்டினா நாட்டு சில ஊடகத்துறையினரும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.