2013-05-11 15:52:18

உணவுப் பாதுகாப்பில் வனங்களின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது ஐ.நா.கருத்தரங்கு


மே,11,2013. வனங்களில் காணப்படும் பறவைகள், விலங்குகள், மரங்கள், போன்றவை, உலகில் உணவுப் பாதுகாப்பையும் ஊட்டச்சத்தையும் மேம்படுத்துவதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்று FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியது.
FAO நிறுவனத்தின் உரோம் தலைமையகத்தில் வருகிற திங்கள் முதல் புதன் வரை நடைபெறவிருக்கின்ற உணவுப் பாதுகாப்பு குறித்த அனைத்துலக கருத்தரங்கையொட்டி செய்தி வெளியிட்ட அந்நிறுவனம், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பழங்குடி இன கலாச்சாரங்கள் உட்பட ஏறக்குறைய 160 கோடிப்பேர் தங்கள் வாழ்வுக்கு காடுகளை நம்பியிருக்கின்றனர் என்று கூறியது.
உலகின் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்கும்வேளை, இவை மதிப்பிடமுடியாத சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நலன்களை வழங்குகின்றன என்றும் FAO நிறுவனம் தெரிவித்தது.
உலகில் கிடைக்கும் சுத்தமான நீரில் நான்கில் மூன்று பகுதிக்கு காடுகளே காரணம் என்றும், 300 கோடிக்கு மேற்பட்ட மக்கள் அடுப்பெரிக்கவும், வீடுகளை வெப்பப்படுத்தவும் தேவையான விறகுகளுக்குக் காடுகளைச் சார்ந்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் கூறியது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.