2013-05-10 16:52:43

பசுமை வளத்தை உறுதி செய்யும் உற்பத்தி வழிகள், அனைவருக்கும் பயன்தரும் - ஐ.நா. உயர் அதிகாரி


மே,10,2013. பசுமை வளத்தை உறுதி செய்யும் உற்பத்தி வழிகளுக்கு மாறுவது வளர்ந்து வரும் நாடுகளுக்கும், உலக வர்த்தகத்திற்கும் நன்மை தரும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பல லட்சம் கோடி டாலர்கள் மதிப்புள்ள வர்த்தகங்கள் உலகெங்கும் ஒவ்வொரு நாளும் வலம்வரும் இக்காலக் கட்டத்தில், கார்பன் வாயு வெளியாவதைக் குறைக்கும் உற்பத்தி வழிகளைப் பெருக்குவது பயனளிக்கும் என்று UNEP எனப்படும் ஐ.நா. சுற்றுச்சூழல் நடவடிக்கைகளின் இயக்குனர் Achim Steiner இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
வளரும் நாடுகள் பொருள் உற்பத்தியில் பெருமளவு ஈடுபட்டிருப்பதால், உற்பத்தி வழிகள், பொருட்களின் விலை நிர்ணயம் போன்ற வழிகளில் இந்நாடுகள் தகுந்த வழிகளை சட்டமாக்கும்போது, உலகின் வளங்களை சரியான அளவு பயன்படுத்தும் உற்பத்தி வழிகள், அனைவருக்கும் பயன்தரும் வகையில் அமையும் என்று Steiner எடுத்துரைத்தார்.
வேளாண்மை, மீன்பிடித் தொழில், காடுகள், சுற்றுலா ஆகியத் துறைகளில் பசுமை வழிகளைப் பின்பற்றும் வாய்ப்புக்கள் பெருகி வருகின்றன என்றும், இவ்வழிகளால் 2020ம் ஆண்டுக்குள் 2.2 ட்ரில்லியன் டாலர்கள், அதாவது, 2 இலட்சத்து 20 ஆயிரம் கோடி டாலர்கள் வர்த்தக வாய்ப்புக்கள் பெருக வாய்ப்புள்ளதென்று ஐ.நா.வின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.