2013-05-10 16:41:15

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி, வெறுமனே சிரித்துப்பேசுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியிலிருந்து வேறுபட்டது


மே,10,2013. கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியின் மக்கள், இம்மகிழ்ச்சி ஒரு கொடை, இம்மகிழ்ச்சி இயேசு நம்மோடும், வானகத்தந்தையோடும் இருக்கிறார் என்ற உறுதியில் கிடைப்பதாகும், இதுவே எப்போதும் முன்னோக்கிச் செல்லும் பண்போடு, நம்பிக்கையும், தாராளத்தன்மையும் கொண்டவர்களாகக் கிறிஸ்தவர்களை ஆக்குகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி, வெறுமனே சிரித்துப்பேசுவதிலிருந்து கிடைக்கும் மேலெழுந்தவாரியான மகிழ்ச்சி அல்ல என்று கூறினார்.
வத்திக்கான் வானொலியின் இயக்குனர் தலைமையில் அவ்வானொலியின் பணியாளர்களில் சிலர் கலந்துகொண்ட இத்திருப்பலியில் மகிழ்ச்சியான சீடர்களின் மனப்பான்மை குறித்து மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு விண்ணேற்பு அடைவதற்கும் பெந்தெகோஸ்தேவுக்கும் இடைப்பட்ட நாள்களில் சீடர்களிடம் இருந்த மகிழ்ச்சியான மனப்பான்மை குறித்துப் பேசிய திருத்தந்தை, ஒரு கிறிஸ்தவர் மகிழ்ச்சியானவராக இருக்கவேண்டும், இதையே இயேசு நமக்குப் போதிக்கிறார் என்றும் கூறினார்.
மகிழ்ச்சி ஒரு திருப்பயணம், கிறிஸ்தவர் மகிழ்ச்சியோடு பாடுகிறார், நடக்கிறார், இதனைத் தன்னோடு எடுத்துச் செல்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, இம்மகிழ்ச்சி ஒரு கொடை, இம்மகிழ்ச்சியை ஆண்டவரிடம் கேட்குமாறு திருஅவையும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்று தனது மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.