2013-05-10 16:31:11

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் : உரையாடல் முழு ஒன்றிப்புக்கு வழிவகுக்கும்


மே,10,2013. நமது இடைவிடாத செபம், நம்மிடையே இடம்பெறும் உரையாடல், அன்பில் நாளுக்குநாள் கட்டி எழுப்பப்படும் ஒன்றிப்பு ஆகியவை முழு ஒன்றிப்பை நோக்கிய முக்கியமான முயற்சிகளை மேலும் எடுப்பதற்கு நமக்கு வழிவகுக்கும் என்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்களை வத்திக்கானில் இவ்வெள்ளிக்கிழமையன்று சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், 40 ஆண்டுகளுக்குமுன், கத்தோலிக்கத் திருஅவை, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை ஆகியவற்றின் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட பொதுவான அறிக்கை கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையில் ஒரு மைல்கல் எனவும் குறிப்பிட்டார்.
இவ்விரு சபைகளுக்கு இடையே முழு ஒன்றிப்பு ஏற்படுவதற்கான பாதை இன்னும் நீண்டதாக இருப்பதை நாம் நன்கு அறிந்திருந்தாலும், இவ்வொன்றிப்பை நோக்கிய பாதையில் குறிப்பிடத்தக்க தூரத்தை ஏற்கனவே நடந்துவந்துள்ளதை நாம் மறக்க விரும்பவில்லை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். இவ்வியாழனன்று உரோம் வந்துள்ள முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் ஐந்து நாள்கள்வரை தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவரான இரண்டாம் Tawadros, அலெக்சாந்திரியா மற்றும் புனித மாற்குத் திருப்பீடத்தின் 118வது திருத்தந்தையாவார்.
1973ம் ஆண்டு மே மாதம் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களை, அப்போதைய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் மூன்றாம் Shenouda அவர்கள் சந்தித்த நிகழ்வுக்குப்பின், இவ்விரு சபைகளின் தலைவர்களுக்கு இடையே நிகழும் சந்திப்பாக இது அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.