2013-05-09 16:13:52

மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பை பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கவேண்டும் - ஐ.நா. உயர் அதிகாரி


மே,09,2013. ஆடைகள் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பங்களாதேஷ் தலைநகரான டாக்காவுக்கருகே Rana Plaza என்ற 8 மாடிக் கட்டிடம் ஏப்ரல் 24ம் தேதி இடிந்து விழுந்ததில் இதுவரை 900க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடிய விபத்தில் இறந்த பெரும்பாலான தொழிலாளிகள் பன்னாட்டு ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு உழைத்து வந்தவர்கள்.
இவ்விபத்தையொட்டி, இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. உயர் அதிகாரி Pavel Sulyandziga அவர்கள், பங்களாதேஷ் அரசுடன் பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய தார்மீகக் கடமைகளைச் சுட்டிக்காட்டினார்.
பங்களாதேஷ் நாட்டில் ஆடைகள் உற்பத்தியில் 50 இலட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்; இவர்களில் பெரும்பாலானோர் மிகக் குறைவான ஊதியம் பெறும் பெண் தொழிலாளிகள் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
இதற்கிடையே, இவ்வியாழனன்று டாக்காவின் புறநகர் பகுதியில் ஆடை உற்பத்தி செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று Reuters செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UN / Reuters








All the contents on this site are copyrighted ©.