2013-05-09 16:07:38

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்கள் உரோம் நகருக்கு வருகை


மே,09,2013. அலெக்சாந்திரியாவின் திருத்தந்தை என்றும், எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் என்றும் அழைக்கப்படும் இரண்டாம் Tawadros அவர்கள் இவ்வியாழன் உரோம் நகருக்கு வருகை தந்துள்ளார்.
இவ்வியாழன் நண்பகல் வேளையில் உரோம் நகர் அடைந்த இரண்டாம் Tawadros அவர்கள், வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருத்தந்தையின் இல்லத்தில் சந்திக்கிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் அடுத்த ஐந்து நாட்களும் தங்கும் இரண்டாம் Tawadros அவர்களின் உரோம் வருகை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று சொல்லப்படுகிறது.
1973ம் ஆண்டு மே மாதம் அப்போதைய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவராகப் பணியாற்றிய மூன்றாம் Shenouda அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் அப்போதையத் தலைவரான திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களைச் சந்தித்த நிகழ்வுக்குப் பின், இவ்விரு தலைவர்களுக்கும் இடையே நிகழும் சந்திப்பு இது.
இரண்டாம் Tawadros அவர்களின் உரோம் நகர் பயணத்தின்போது, புனித பேதுருவின் கல்லறை, புனித பவுல் தலை வெட்டப்பட்ட இடம், Colosseum ஆகிய முக்கிய தலங்களைப் பார்வையிடுகிறார்.
கர்தினால் Kurt Koch அவர்களின் தலைமையில் பணியாற்றும் கிறிஸ்துவ ஒன்றிப்பு திருப்பீட அவை உறுப்பினர்களையும், கர்தினால் Leonardo Sandri அவர்களின் தலைமையில் பணியாற்றும் கீழை வழிபாட்டுமுறை திருப்பீடப் பேராயத்தின் உறுப்பினர்களையும் இரண்டாம் Tawadros வரும் நாட்களில் சந்திக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.