2013-05-08 15:57:39

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 08, 2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் புதன் பொதுமறைபோதகங்களில் துவக்கி வைத்த 'விசுவாசப் பிரமாணம்' குறித்த சிந்தனைகளை அதே வரிசையில் தொடர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், 'ஆண்டவரும் உயிரளிப்பருமான தூய ஆவியை விசுவசிக்கிறேன்' என்பது குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
தூய ஆவி குறித்துப் பேசும் இப்பகுதி, தூய ஆவி ஆண்டவர், முழுமையான கடவுள், மூவொரு கடவுளில் மூன்றாம் ஆள் என எடுத்துச்சொல்கிறது. அவர் உயிர்த்த கிறிஸ்துவின் கொடை, மற்றும், மூவொரு கடவுளுடன் ஆன ஒன்றிப்பிற்கு நம் விசுவாசத்தின் மூலம் அழைத்துச்செல்பவரும் அவரே. தூய ஆவியானவர் நமக்கு வாழ்வை வழங்குபவர் எனவும், விசுவாசப்பிரமாணம் நமக்கு எடுத்துரைக்கிறது. நாம் அனைவருமே உண்மையான வாழ்வையும், அழகு, அமைதி மற்றும் அன்பின் முழுமையையும் அதிகம் அதிகமாக விரும்புகிறோம். நம் இதயங்களில் குடியிருக்கும் தூய ஆவியானவரே, உயிருள்ள தண்ணீரின் உண்மையான ஆதாரம். 'நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்' என சமாரியப்பெண்ணை நோக்கி இயேசு வாக்களித்தஅதே உயிருள்ள தண்ணீரின் ஆதாரமே தூய ஆவி. தந்தையிடமிருந்து இயேசுவால் அனுப்பப்பட்ட தூய ஆவியானவர் நம்மைத் தூய்மைப்படுத்தி, புதுப்பித்து, மாற்றியமைக்கிறார். அவர் நமக்கு ஏழுமடங்கான கொடைகளை வழங்குவதோடு நம் தந்தையாம் கடவுளின் குழந்தைகளாகவும் நம்மை மாற்றுகிறார். அனைத்தையும் கிறிஸ்துவின் கண்களோடு நோக்கவும், நம்மீது இறைவன் கொண்டிருக்கும் அளவற்ற அன்பை உணர்ந்துகொள்ளவும், அதே அன்பை நம் சகோதர சகோதரிகளோடு பகிர்ந்துகொள்ளவும் தூய ஆவி இப்போதும் நமக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார் என தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
ஒவ்வொரு நாளும் தன் டுவிட்டர் பக்கத்தில் செய்திகளை வழங்கிவரும் திருத்தந்தை, இப்புதனன்று, 'அவர்கள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப்பெறும்பொருட்டு நான் வந்துள்ளேன்' என்கிறார் இயேசு. உலகப்பொருட்களில் அல்ல, மாறாக, இங்குதான் உண்மையான செல்வத்தை நாம் கண்டுகொள்கிறோம், என்ற வாக்கியத்தை வெளியிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.