2013-05-08 15:55:47

அன்னைமரியா திருத்தலங்கள் – Pompeii அன்னைமரியா திருத்தலம்


மே,08,2013. தென் இத்தாலியில், இப்போதைய நவீன Naples நகருக்கு அருகில் அமைந்துள்ள பழங்கால உரோமையர் நகரம் பொம்பெய். இந்நகரத்துக்கு அருகிலுள்ள Vesuvius எரிமலை கி.பி.79ம் ஆண்டில் வெடித்துச் சிதறியதில் பொம்பெய் நகரமும் அதைச் சுற்றியிருந்த பெரிய பெரிய ஆடம்பர வீடுகளும் 4 மீட்டர் முதல் 6 மீட்டர் வரையிலான சகதிக்குள் அமுங்கின. அதிலிருந்து வெளிவந்த சகதியும் புகையும் கலந்த நெருப்பு ஆறின் அடையாளங்களையும், அந்த Vesuvius எரிமலையின் பள்ளத்திலிருந்து புகை வெளிவருவதையும் இன்றும் காண முடிகின்றது. இந்த நகரம் கி.மு. 7 அல்லது 6ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என்றும், கி.மு.80ல் உரோமையர்கள் இந்நகரைக் கைப்பற்றினர் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்நகரம் எரிமலைக்குழம்புகளால் அழிந்தபோது ஆடம்பரக்களியாட்ட அரங்குகள் நிறைந்ததாய், தண்ணீர் வசதிகளுடன் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்நகரம் அழிந்து ஏறக்குறைய 1,500 ஆண்டுகள் கழித்துத்தான் அதாவது 1,599ம் ஆண்டில் அவ்விடத்தில் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. அதன்பின்னர், 150 ஆண்டுகள் கழித்து 1,748ம் ஆண்டில் இஸ்பானிய பொறியியலாளர் Rocque Joaquin de Alcubierre பரந்த அளவில் ஆய்வுகளைத் தொடங்கினார். காற்றும் ஈரமும் இல்லாததால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் புதையுண்டிருந்த பொருள்களையும், இறந்த உடல்களையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். எரிமலையால் அழிந்த பழைய பொம்பெய் நகரம், கடந்த 250 ஆண்டுகளுக்கு மேலாக, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. யுனெஸ்கோ நிறுவனம், பொம்பெய் நகரத்தை, உலகப் பாரம்பரிய வளங்களில் ஒன்றாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
இந்தப் பழைய பொம்பெய் நகரத்திலிருந்து சிறிது தூரத்தில் Valle di Pompeii என்ற இடத்தில் அன்னைமரியாவுக்கு அழகானதோர் ஆலயம் 1800களில் எழுப்பப்பட்டது. உலகின் பல நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கில் பழைய பொம்பெய் நகரத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அதற்கருகில் கோவில் கொண்டுள்ள பொம்பெய் அன்னைமரியா திருத்தலத்துக்கும் செல்லத் தவறுவதில்லை. இத்திருத்தலத்தின் உயரமான பீடத்திலுள்ள அன்னைமரியாவின் திருவுருவத்தை வைத்து இத்திருத்தலம் செபமாலை அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது எனச் சொல்லிவிடலாம். இவ்வன்னைமரியா, பொம்பெய் மாதா என்றும் போற்றப்படுகிறார். 6ம் நூற்றாண்டில் கீழை வழிபாட்டுமுறையில் போற்றப்பட்ட அன்னைமரியாவின் படத்தை ஒத்தது பொம்பெய் திருத்தலத்திலுள்ள அன்னைமரியா படம்.
கி.பி.79ம் ஆண்டில் பொம்பெய் நகரம் அழிந்தது. 4ம் நூற்றாண்டில் இப்பகுதியில் கிறிஸ்தவர்கள் குடியேறினர். பொம்பெய்க்கு அருகிலுள்ள Valle di Pompeiiல் நம் மீட்பர் ஆலயம் ஒன்றைக் கிறிஸ்தவர்கள் கட்டினர். 11ம் நூற்றாண்டில் ஆசீர்வாதப்பர் துறவு சபையினரிடம் இவ்வாலயத்தைப் பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நாளடைவில் இவ்வாலயம் அழிந்தது. அவ்விடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது. அக்காலத்தில் இத்தாலியில் 18 பங்குத்தளங்களில் மக்களே தங்களது பங்குக்குருக்களை நியமித்தனர். அப்பங்குத்தளங்களில் ஒன்றாக Valle di Pompeii இருந்தது. இந்த Valle di Pompeii குறித்து 1891ம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு குறிப்பில், "இந்த ஊர் ஏழ்மையில் உழன்றது. அதனால் பள்ளிக்கூடம் கட்டமுடியவில்லை. இவ்வூர் மக்கள் மூடநம்பிக்கை கொண்டவர்களாய் பல குற்றவாளிகளாயும், பலர் திருடர்களாகவும் இருந்தனர், ஆனால் இவ்வூரின் தலைவிதியையே மாற்றியவர்கள் Bartolo Longo, Marianna Farnararo De Fusco என்ற தம்பதியர்தான். இவ்விருவரில் முக்கிய காரணியாக இருந்தவர் முத்திப்பேறு பெற்ற Bartolo Longoதான்.
பொதுநிலை விசுவாசி Bartolo Longoதான் பொம்பெய் செபமாலை அன்னைமரியா திருத்தலத்தின் நிறுவனர். 1841ம் ஆண்டில் மருத்துவரின் மகனாகப் பிறந்த Bartolo Longo, வழக்கறிஞர் ஆவதற்காகப் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு தீய பிரிவில் சேர்ந்து சாத்தானின் குருவாக அபிஷேகம் செய்யப்பட்டார். கிறிஸ்தவத்தைப் பொதுப்படையாகவே கிண்டல் செய்தார். தனது அனைத்து வல்லமையையும் பயன்படுத்தி மக்களை கத்தோலிக்கத்திலிருந்து திசை திருப்ப முயற்சித்தார். ஆயினும், Vincent Pede என்ற ஒரு நல்ல நண்பர் அவருக்குக் கிடைத்தார். அவர் கிறிஸ்துவின் அன்பையும் கருணையையும் கனிவையும் அவருக்குக் காட்டினார். Alberto Radente என்ற ஒரு தொமினிக்கன் சபை குருவையும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். இந்த தொமினிக்கன் சபை குரு, அன்னைமரியா மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். செபமாலை பக்தியைப் பரப்பி வந்தவர். Bartolo Longo மனம்மாறி திருமுழுக்குப் பெற்றபோது மரியா என்ற பெயரையும் சேர்த்து, Bartolo Maria Longo என்று தனது பெயரை மாற்றினார். மரியா பாவிகளின் அடைக்கலம் என்றும், தான் மனந்திரும்புவதற்கு அன்னைமரியாவே காரணம் என்றும் கிறிஸ்துவிடம் தன்னை அழைத்துச் செல்லும் அடைக்கலம் அத்தாய் என்றும் உணர்ந்தார். Bartolo மனம் மாறிய பின்னர் தனது வாழ்நாள் முழுவதும் தபம் செய்யவும், தான் மிக அவதூறாகப் பேசிய திருஅவைக்குத் தொண்டுபுரியவும் விரும்பினார். ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்குப் பணி செய்வதற்கு வாக்குறுதி எடுத்தார். “புதிய பொம்பெய்யின் செபமாலை” என்ற துண்டு பிரசுரத்தை வெளியிட்டு, தன்னால் இயன்ற அளவு செபமாலை பக்தியைப் பரப்பினார்.
Bartolo, ஒருநாள் மாலையில் பொம்பெய்யில் எலிகளும் பல்லிகளும் நிறைந்த அழிந்த ஆலயத்துக்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஓர் அனுபூதி அனுபவத்தைப் பெற்றார். அவரே எழுதியிருக்கிறார்-
"நான் எனது கடந்தகால பாவ வாழ்வை நினைத்து ஏறத்தாழ தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம்வரை சென்றுவிட்டேன். ஆனால், நீ மீட்படைய விரும்பினால் செபமாலை பக்தியைப் பரப்பு, இது மரியாவின் வாக்குறுதி" என்று துறவி Alberto சொன்னது எனது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இவ்வார்த்தைகள் எனது ஆன்மாவுக்கு ஒளியூட்டின. முழங்காலிலிருந்து செபித்தேன். இது உண்மையானால் தாயே, நான் உமது செபமாலை பக்தியைப் பரப்பும்வரை இந்த பொம்பெய் பள்ளத்தாக்கைவிட்டுச் செல்லமாட்டேன், இது உறுதி என்று.
Bartolo அந்த ஊர் மக்களிடம் பேசி பாழடைந்து கிடந்த அந்த ஆலயத்தைச் சுத்தம் செய்ய உதவி செய்யுமாறு கேட்டார். பின்னர் ஒருநாள் மாலை தன்னோடு சேர்ந்து செபமாலை செபிக்கவும் அம்மக்களை அழைத்தார். ஆனால் அறிவதற்கு ஆர்வம் காட்டிய சில சிறாரே ஆலயம் சென்றனர். ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு குடிசையாக, ஒவ்வொரு பண்ணையாகச் சென்று செபமாலைகளையும், மாதா பதக்கங்களையும் கொடுத்து செபம் செய்வதற்கு மக்களை ஊக்குவித்தார். Bartoloவை மக்கள் அன்பு செய்து மதிக்கத் தொடங்கினர். ஆனால் அவர்கள் செபமாலை பற்றிப் புரிந்துகொள்ளவுமில்லை, அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை. ஆயினும் 1873ம் ஆண்டு செபமாலை அன்னைமரியா திருவிழாவைக் கொண்டாட முன்வந்தார் Bartolo. அவ்விழாவன்று மழை பெய்தது. அன்று போதிக்க வந்தவர் அவ்வூர் மக்கள் புரிந்துகொள்ளும் வழக்கு மொழியில் பேசாமல், இத்தாலிய மொழியில் பேசினார். எனவே அவரது முதல் முயற்சி தோல்வியடைந்தது. அடுத்த ஆண்டும் விழா எடுக்க முயற்சித்தார். அதுவும் அவ்வளவு வெற்றியைத் தரவில்லை. ஆயினும் சிலர் செபமாலை சொல்லக் கற்றுக்கொண்டனர். அதற்கு அடுத்த ஆண்டு இரண்டு வாரங்களுக்கு உலக மீட்பர் சபை குருக்களை அழைத்தார். சிறிய ஆலயத்தையும் முழுமையாகச் சீரமைத்தார். இம்முறை அவரது முயற்சி வெற்றியடைந்தது.
பெரியதோர் ஆலயம் கட்ட ஆயர் விரும்பினார். அவ்வாலயத்தில் வைப்பதற்கென செபமாலை அன்னைமரியா படத்தைத் தேடி அலைந்தார் Bartolo. அக்காலத் திருஅவை சட்டப்படி, புனிதப்படங்கள் மரத்தில் அல்லது கான்வாஸ் துணியில் எண்ணெய்யில் வரையப்பட்டிருக்க வேண்டும். எனவே இத்தகைய ஒரு படம் நேப்பில்ஸில் ஓர் அருள்சகோதரி இல்லத்தில் இருந்ததாகவும், அது 3,40 லீராக்களுக்கு ஒரு கடையில் வாங்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டார். ஆனால் அது மிக மோசமான நிலையில் இருந்தது. இருந்தாலும் நன்கொடையாகக் கிடைத்த அப்படத்தை வாங்கி 1876ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதியன்று ஆலயத்தில் வைத்தார். Federico Madlarelli என்ற புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் 1880ம் ஆண்டில் அப்படத்தைச் சரிப்படுத்தினார். பின்னர் 1965ம் ஆண்டு வத்திக்கான் கலைஞர்கள் அப்படத்தை சரிசெய்தனர்.
அந்த செபமாலை அன்னைமரியா படம் முதலில் 1875ம் ஆண்டு சிறிய ஆலயத்தில் வைக்கப்பட்டது. அப்பகுதியின் 300 பேர் புதிய ஆலயம் கட்டுவதற்கு ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்க முன்வந்தனர். 1876ம் ஆண்டு மே 8ம் தேதி புதிய ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஒரு மாதத்துக்குள் அவ்வாலயத்தில் பல புதுமைகள் நடந்தன. 4 பேர் அற்புதமாகக் குணமடைந்ததாகப் பதிவு செய்யப்பட்டது. அன்று முதல், சிறப்பாக, 1891ம் ஆண்டுக்கும் 1894ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவ்வன்னைமரியா ஆலயத்தில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான புதுமைகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன. 1883ம் ஆண்டில் ஆலயக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அப்போது Bartolo மக்களிடம், இந்தப் பெருமைக்குரிய இடத்தில் வெற்றிகளின் அரசியான அன்னைமரியாமீதான நமது அன்பு மற்றும் விசுவாசத்தை இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகளுக்கு நினைவூட்டும் நினைவுச்சின்னத்தை நாம் விட்டுவைக்க விரும்புகிறோம் எனக் கூறினார்.
1894ம் ஆண்டில் Bartoloவும் அவரது மனைவி Marianna Farnararo De Fuscoவும் இப்புதிய ஆலயத்தைத் திருத்தந்தையிடம் கொடுத்தனர். அன்றுமுதல் இன்றுவரை இத்திருத்தலம் திருத்தந்தையின் பாதுகாவலிலே இருந்து வருகிறது. புதிய ஆலயம் அருள்பொழிவு செய்யப்பட்டவுடன், செபமாலை அன்னைமரியின் திருப்படமும் முடிசூட்டப்பட்டது. 2008ம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவ்வன்னையின் திருப்படத்துக்கு தங்க ரோஜாவை வழங்கினார். இப்படத்தில் ஒரு பக்கத்தில் புனித தொமினிக்கும், அடுத்தப் பக்கத்தில் புனித சியன்னா கத்ரீனும் அன்னைமரியிடமிருந்து செபமாலை பெறுவதாக வரையப்பட்டிருக்கின்றது. இந்த வெற்றிகளின் அன்னைமரியாவான செபமாலை அன்னையிடம் செபிக்கும் சிறப்புப் பக்தி முயற்சி 1883ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இது ஆண்டுதோறும் மே 8ம் தேதியன்றும், அக்டோபரின் முதல் ஞாயிறன்றும் உலகெங்கும் செபிக்கப்படுகின்றது. Pompeiiல் அன்னைமரியாவும் தான் குணப்படுத்திய சிறாரில் ஒருவரிடம் இந்தப் பக்தி பற்றிச் சொல்லியிருக்கிறார்.

1979ம் ஆண்டு அக்டோபர் 21ம் நாளன்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் பொம்பெய் சென்றார். 1980ம் ஆண்டு அக்டோபர் 26ம் நாளன்று Bartolo Maria Longoவை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்திய திருத்தந்தை 2ம் ஜான் பால், Bartolo Longo, மரியின் மனிதர் மற்றும் செபமாலையின் திருத்தூதர் என்றும் புகழ்ந்தார்.
இப்புதன் பொது மறைபோதகத்திலும், மே 8, இப்புதனன்று பொம்பெய் செபமாலை அன்னையிடம் சிறப்பாகச் செபிக்கின்றோம். மரியாவின் பரிந்துரையால் நம் ஆண்டவர் திருஅவைக்கும், உலகம் முழுவதற்கும் கருணையையும் அமைதியையும் அளிப்பாராக. என்று கூறினார். வெற்றிகளின் அன்னைமரியாவான செபமாலை அன்னையிடம் நாமும் இந்நாளில் சிறப்பாகச் செபிப்போம். நம்பிக்கையுடன் அன்னைமரியாவை அண்டிச் செல்வோம். அத்தாய் நம் அனைவரின் அடைக்கலம்.








All the contents on this site are copyrighted ©.