2013-05-07 16:03:12

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயண நிகழ்வுகள்


மே,07,2013. வருகிற ஜூலை 22 முதல் 29 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயண நிகழ்வுகள் குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டன.
பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் 28வது அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினத்தை முன்னிட்டு, அந்நாட்டுக்கு எட்டு நாள்கள் கொண்ட திருப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகிற ஜூலை 22ம் தேதி உரோம் நேரம் காலை 8.45 மணிக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ், ரியோ டி ஜெனிரோவை மாலை 4 மணிக்குச் சென்றடைவார். மாலை 5 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் பிரேசில் அரசுத்தலைவரை மரியாதை நிமித்தம் சந்திப்பார்.
24ம் தேதி புதன்கிழமையிலிருந்து மீண்டும் திருப்பயண நிகழ்வுகள் தொடங்கும். அன்று Aparecida அமலமரி அன்னைமரியா திருத்தலம் சென்று திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை.
25ம் தேதி மாலை 6 மணியளவில் இளையோர் தின நிகழ்வுகள் தொடங்கும்.
26ம் தேதி சில இளையோர், திருத்தந்தையிடம் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுவர். அன்று இளையோருடன் மதிய உணவு அருந்துதல், மாலையில் அவர்களுடன் சிலுவைப்பாதை பக்தி முயற்சியில் கலந்து கொள்ளல் உட்பட சில நிகழ்வுகள் இந்நாளின் திருப்பயணத் திட்டத்தில் உள்ளன.
27ம் தேதி ஆயர்களுடன் திருப்பலி நிகழ்த்துதல், தொழிலதிபர்களைச் சந்தித்தல், இளையோருடன் திருவிழிப்புச் செப வழிபாட்டில் பங்கு பெறுதல் போன்ற நிகழ்ச்சிகள் உட்பட சில நிகழ்வுகள் திருப்பயணத் திட்டத்தில் உள்ளன.
28ம் தேதி காலை 10 மணியளவில், 28வது அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தின நிறைவுத் திருப்பலியை நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ், அன்று மாலை உரோமைக்குப் புறப்படுவார். 29ம் தேதி திங்கள் காலை 11.30 மணியளவில் அவர் உரோம் வந்துசேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.