2013-05-07 16:18:19

டான்சானியா : ஆலயம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் கூட்டம் நடத்துவதற்குத் திட்டம்


மே,07,2013. கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய டான்சானியாவில் இஞ்ஞாயிறன்று கத்தோலிக்க ஆலயம் ஒன்று குண்டுவெடிப்பால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பதட்டநிலைகளைக் களையும் நோக்கத்தில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டு வருகின்றனர்.
டான்சானியாவின் வடக்குப் பகுதியிலுள்ள அருஷா (Arusha) என்ற நகரத்தில், இஞ்ஞாயிறன்று புனித வளன் புதிய ஆலயத் திறப்பு விழாவுக்கெனத் திருப்பலி தொடங்கவிருந்த நேரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு பெண் இறந்துள்ளார் மற்றும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுமாதிரியான வன்முறை டான்சானியா நாட்டில் இதுவரை இடம்பெற்றதில்லை என்றுரைத்த அந்நாட்டு காரித்தாஸ் நிறுவனச் செயலர் Joachim Wangabo, இவ்வன்முறை, முஸ்லீம் பயங்கரவாதிகளோடு தொடர்புடையது என்று அரசு கூறுவதாகவும் தெரிவித்தார்.
டான்சானியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Francisco Montecillo Padilla, அருஷா மறைமாவட்ட ஆயர் Josaphat Lebulu, இன்னும் பல அருள்பணியாளர்களுடன் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தவிருந்த சமயத்தில் திடீரெனக் குண்டு வெடித்துள்ளது.
இக்குண்டுவெடிப்புத் தொடர்பாக, சவுதி அரேபியாவைச் சேர்ந்த நால்வர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டிருப்பதாக உள்ளூர் காவல்துறை கூறியுள்ளது.
அருஷா நகரம் கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் பகுதியான கிளிமாஞ்ஜாரோ மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால், இந்தத் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : ICN, CNA







All the contents on this site are copyrighted ©.