2013-05-07 16:12:28

கர்தினால் கிரேசியஸ் : சமய சுதந்திரமின்றி இந்தியா வளர முடியாது


மே,07,2013. இந்திய அரசியல் அமைப்பில் அனைத்துக் குடிமக்களுக்கும் உறுதி வழங்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு அரசு நிறுவனங்களும் சட்ட அமைப்பாளர்களும் நடைமுறைச் செயல்திட்டங்களை எடுக்குமாறு இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக அளவில் சமய சுதந்திரம் மீறப்படுவது குறித்து ஆய்வு செய்யும் USCIRF என்ற அமெரிக்க் ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த கர்தினால் கிரேசியஸ், சமய சுதந்திரமின்றி இந்தியா வளர முடியாது என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் சமய சுதந்திரம் மீறப்படுவது குறித்து தான் வருத்தம் அடைவதாகவும், மக்களின் உரிமைகள் எவ்விதத்திலும் மீறப்படாமல் இருப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கூறிய கர்தினால் கிரேசியஸ், இதன் மூலம் சிறுபான்மையினர் தங்களது மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
உலகில் சமய சுதந்திரம் மீறப்படுவது அதிகரித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அஜர்பைஜான், கியூபா, இந்தோனேசியா, கஜகஸ்தான், லாவோஸ், இரஷ்யா ஆகிய நாடுகளும் USCIRF நிறுவன அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.