2013-05-06 17:00:21

திருத்தந்தை பிரான்சிஸ் - பக்தி முயற்சிகள் இயேசுவைச் சந்திக்கும் ஒரு சிறப்பான தளம்


மே,06,2013. நற்செய்தியைப் பரப்புதல், திருஅவையாக வாழுதல், மறைபரப்புப் பணியில் ஈடுபடுதல் என்ற மூன்றையும் உங்களுக்கு முன் வைக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
தொடர்ந்து பெய்த மழையிலும் இஞ்ஞாயிறன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகள் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கலந்து கொண்ட திருப்பலியை முன்னின்று நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மழையையும் பொருட்படுத்தாமல் துணிவுடன் வந்திருக்கும் விசுவாசிகளைப் பாராட்டி, தன் மறையுரையைத் துவக்கினார்.
பல்வேறு நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத்தியில் உருவாகி கடைபிடிக்கப்படும் பக்தி முயற்சிகளின் அமைப்புக்களை, புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவை, நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக வத்திக்கானுக்கு அழைத்திருந்தது.
இந்த அழைப்பை ஏற்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பக்தி முயற்சிகள் இயேசுவைச் சந்திக்கும் ஒரு சிறப்பான தளம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்த பக்தி முயற்சி அமைப்புக்களைக் குறித்து முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பேசுகையில், இவ்வமைப்பினரின் பணிகளாக, நற்செய்தி பரப்புதல், திருஅவையாக வாழ்தல் என்ற இரு அம்சங்களைக் குறிப்பிட்டார் என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றாவதாக, மறைபரப்புப் பணியில் ஈடுபடுவதும் இவ்வமைப்பினரின் பணிகளில் ஒன்று என்று எடுத்துரைத்தார்.
குழந்தைகளுடன் திருத்தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு கிறிஸ்துவையும், கத்தோலிக்க விசுவாசத்தையும் அறிமுகப்படுத்தும் அற்புதமான நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என்பதை, திருத்தந்தை பெருமையுடன் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.