2013-05-06 16:32:46

ஒவ்வொரு நாளும் 'இன்று தூய ஆவியார் எனக்குள் என்ன செயல்கள் ஆற்றினார்?' என்ற கேள்வியை எழுப்பவேண்டும் - திருத்தந்தை அழைப்பு


மே,06,2013. 'துணையாளர்' என்று இயேசு அழைத்த தூய ஆவியார் நம் ஒவ்வொருவருக்குள்ளும் தங்கி நம்மைக் காக்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி ஆற்றிய திருத்தந்தை, இன்றைய நாளின் வாசங்களை, சிறப்பாக நற்செய்தியில் கூறப்பட்டுள்ள தூய ஆவியாரை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு திருத்தந்தை ஆற்றிய இத்திருப்பலியில், இப்பேராலய முதன்மை குருவான கர்தினால் Angelo Comastri கலந்து கொண்டார்.
பவுல் அடியாரின் வார்த்தைகளைக் கேட்டு, தன் இதயத்தை தூய ஆவியாருக்குத் திறந்த லீதியா என்ற பெண்ணின் எடுத்துக்காட்டைக் கூறியத் திருத்தந்தை, இயேசுவையும், அவரது செய்தியையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள தூய ஆவியார் உதவுகிறார் என்பதையும் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு நாளின் இறுதியிலும் 'இன்று தூய ஆவியார் எனக்குள் என்ன செயல்கள் ஆற்றினார்?' என்ற கேள்வியை எழுப்பி, ஓர் ஆன்ம ஆய்வில் ஈடுபடுவது பயனளிக்கும் என்று திருத்தந்தை அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
இறைவனின் அன்புக்கும் கருணைக்கும் சக்திவாய்ந்த ஒரு சாட்சியாக நம் வாழ்வின் அனைத்து அம்சங்களும் அமையும்படி ஆண்டவரின் உதவியை மன்றாடுவோம் என்ற Twitter செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.