2013-05-04 15:44:10

வன்முறைகள் நிறுத்தப்படுமாறு வெனெசுவேலா கர்தினால் வேண்டுகோள்


மே,04,2013. வெனெசுவேலாவில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அந்நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் நிறுத்தப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அந்நாட்டினர் செவிமடுக்குமாறு கேட்டுள்ளார் தலைநகர் கரகாஸ் கர்தினால் Jorge Urosa Savino.
அண்மையில் அந்நாட்டின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Nicolas Maduro நிர்வாகத்துக்கும், எதிர்க்கட்சி வேட்பாளர் Henrique Caprilesவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சொற்போர்கள், அச்சுறுத்தல்கள் உட்பட வெனெசுவேலாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உரையாடலும் நன்மதிப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார் கர்தினால் Urosa.
வெனெசுவேலா மக்கள் தற்போது அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக உரைத்துள்ள கர்தினால் Urosa, இரு அரசியல் கட்சிகளுமே ஒன்றையொன்று அங்கீகரித்தால் மட்டுமே ஒரு சுமுகமான தீர்வை அடைய முடியும் என்ற அந்நாட்டின் ஆயர்களின் அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின் சாலைகளில் அதிகரித்துவரும் பாதுகாப்பின்மை, அந்நாட்டின் 80 விழுக்காட்டு மக்களையும், திருஅவையையும் பாதித்துள்ளது எனவும், கரகாஸ் கர்தினால் Urosa ஒரு நிருபருக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.