2013-05-04 15:50:40

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான புதிய சட்டங்கள் அடிப்படைக் காரணங்களைக் களையத் தவறியுள்ளன, ஐ.நா. வல்லுனர்


மே,04,2013. இந்தியாவில் பாலியல் வன்செயலையும், மற்றும் பிற பாலியல் சார்ந்த குற்றங்களையும் தடுப்பதற்கும், அவை குறித்து வழக்குப் பதிவு செய்வதற்குமென அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள், அக்குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் போதுமானவைகளாக இல்லை என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் குறை கூறியுள்ளார்.
இந்திய சமுதாயத்தில் காணப்படும் திட்டமிட்ட பாலியல் சமத்துவமற்றதன்மையை அகற்றுவதற்கு இச்சட்டங்கள் உதவவில்லை என்று, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த ஐ.நா. சிறப்புத் தொடர்பாளர் Rashida Manjoo கூறினார்.
இந்தியாவில் பத்து நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துத் திரும்பியுள்ள Manjoo, பாலியல் வன்கொடுமைக்கு எதிரானச் சட்டங்களில் மாற்றம் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது எனினும், வர்மா குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ள பரிந்துரைகளை முழுவதுமாக இச்சட்டங்கள் பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
வீடுகளில் வன்முறை, சாதி அடிப்படையில் பாகுபாடு, வரதட்சணை தொடர்புடைய மரணங்கள், பாலியல் பலாத்காரம், மாந்திரீகம் தொடர்புடைய செயல்கள், பாலியல் வன்முறையோடு தொடர்புடைய சண்டைகள், கட்டாயத் திருமணங்கள் உட்பட பல வகைகளில் இந்தியாவில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக வன்முறைகள் இடம்பெறுகின்றன என்று ஐ.நா.கூறியுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.