2013-05-04 15:03:33

உயிர்ப்புக் காலம் 6ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 விமானம் ஒன்று ஏறத்தாழ 50,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென அதிர்ந்தது. ஒரு பக்கமாகச் சாய்ந்தது. விமானத்தில் இயந்திரம் பழுதடைந்ததாக, அதன் ஓர் இறக்கை பழுதடைந்ததாக பயணிகள் மத்தியில் வதந்திகள் பரவியதால், அவர்களது அச்சம் கூடியது. ஒரு சிலர் கண்களை மூடிக்கொண்டு இருக்கையைக் கெட்டியாகப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். வேறு சிலர் தங்களுக்குத் தெரிந்த செபங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். பல நிமிடங்கள் இந்த நிலை நீடித்ததால், ஏறத்தாழ விமானத்தில் இருந்த அனைவரையுமே அச்சம் ஆட்கொண்டது... ஒரே ஒருவரைத் தவிர... ஆம், விமானத்தில் பயணம் செய்த பத்து வயது சிறுமி ஒருவர், எவ்வித பயமுமின்றி ஒரு கார்ட்டூன் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அச்சிறுமி தனியே பயணம் செய்தார் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அருகில் அமர்ந்திருந்த பெரியவர் அச்சிறுமியிடம், "உனக்குப் பயமாக இல்லையா?" என்று கேட்டார். அதற்கு அச்சிறுமி சிரித்தபடியே, "எனக்குப் பயமே இல்லை... ஏன்னா, எங்க அப்பாதான் இந்த விமானத்தை ஓட்டுகிறார்" என்று பதில் சொன்னார். அனைவரையும் அச்சுறுத்திய ஒரு சூழலில் அச்சிறுமியின் மனதில் அமைதியை விதைத்தது, தன் தந்தையின் மீது அச்சிறுமி கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கை.

யோவான் நற்செய்தி 14: 27
"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; மருளவேண்டாம்."
இறுதி இரவுணவின்போது, இயேசு தன் சீடர்களுக்குத் தந்த பிரியாவிடை செய்தியின் ஒரு பகுதி இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது. உலகம் தரும் அமைதி, இறைவன் தரும் அமைதி என்ற இரு வேறு துருவங்களைச் சிந்திக்க, இவ்விரு துருவங்களையும் இணைக்க முடியுமா என்பதையும் சிந்திக்க இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

உலகம் தரும் அமைதி என்று சொல்லும்போது, நம்மில் பலர் எண்ணிப்பார்ப்பது, போரும், பூசலும், சண்டையும், சச்சரவும் இல்லாத ஒரு நிலை. அமைதி என்ற சொல்லுக்கு உலகத் தலைவர்கள் தரும் ஒரு சில இலக்கணங்கள் இதோ:
"நாடுகளிடையே பீரங்கிகளால் உருவாகும் காயங்கள் தேவையில்லையெனில், சிறு குண்டூசி கொண்டு உருவாகும் காயங்களைத் தவிர்க்க வேண்டும். அதுதான் அமைதிக்கு வழி" என்று சொன்னவர் நெப்போலியன் போனபார்ட்.
If they want peace, nations should avoid the pin-pricks that precede cannon shots.
Napoleon Bonaparte
அமைதியைப் பற்றி அண்ணல் காந்தி சொன்ன பல கூற்றுகளில் சிறந்ததொரு கூற்று: "கண்ணுக்குக் கண் என்று வாழ்வதால், உலகமே பார்வை இழந்துவிடும்."
An eye for an eye only ends up making the whole world blind.
Mahatma Gandhi
"நாடுகளிடையே உருவாகும் உறவு, அமைதி அல்ல. போரற்ற நிலை அமைதி அல்ல. அமைதி என்பது ஒரு வகை மனநிலை. சலனமற்ற மனநிலையே அமைதியைத் தரும். அமைதி நிறைந்த மனிதர்களாலேயே நிலையான அமைதியை உருவாக்க முடியும்." என்று சொன்னவர் ஜவகர்லால் நேரு.
Peace is not a relationship of nations. It is a condition of mind brought about by a serenity of soul. Peace is not merely the absence of war. It is also a state of mind. Lasting peace can come only to peaceful people.
Jawaharlal Nehru

மனித வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் Herodotus, கி.மு. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்கச் சிந்தனையாளர். அமைதியையும், போரையும் இணைத்து இவர் சொன்ன வார்த்தைகள், அன்றிலிருந்து இன்றுவரை மனிதரிடையே வேரூன்ற முடியாமல் தவிக்கும் அமைதியைப்பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன: "ஒரு நாட்டில் அமைதி நிலவுகையில், மகன்கள் தங்கள் தந்தையரை அடக்கம் செய்வர். போர்க்காலத்தில், தந்தையர் தங்கள் மகன்களை அடக்கம் செய்வர்."
In peace, sons bury their fathers. In war, fathers bury their sons. - Herodotus

உள்நாட்டுப் போரினால் கடந்த பல ஆண்டுகள் காயப்பட்டு, இன்னும் தன் காயங்களைக் குணமாக்க முடியாமல் தவிக்கும் இலங்கையில், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் முள்ளாகத் தைத்து நிற்கின்றன:
இயற்கை நியதியின்படி, ஒவ்வொரு மரத்திலும் வேர்கள் பூமிக்கடியில் இருக்கும். இலை, காய், கனி என்று மரத்தின் பலன்கள் பூமிக்கு மேல் இருக்கும். எங்கள் நாட்டிலோ நாங்கள் பெற்று வளர்த்த கனிகளான எங்கள் பிள்ளைகள் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றனர். வேர்களாகிய நாங்கள் பூமிக்குமேல் உயிரற்று திரிகிறோம் என்று அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் இன்று பொருந்தும்.

வேர்கள் பூமிக்கு மேலும், கிளைகள், இலைகள், காய்கள், கனிகள் ஆகிய அனைத்தும் பூமிக்குள்ளும் இருக்கும்படி மரங்களை யாராவது நட்டால், அவரை மதி இழந்தவர் என்று எளிதில் கூறலாம். ஆனால், உலகில் இன்று இதுதானே நடைமுறை வழக்காக உள்ளது. ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டிய இளையோர், ஒவ்வொரு நாட்டிலும் இராணுவத்தில் பணியாற்றுவதை நாம் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும்? தலைகீழாக நடப்பட்ட மரங்களைப் போல், மனித சமுதாயத்தை ஒவ்வொரு நாட்டிலும் தலைகீழாக மாற்றிவரும் அரசுகள், தாங்கள் செய்வது மதி இழந்த செயல் என்பதை உணராமல், இராணுவத்திற்கும், போர் கருவிகளுக்கும் செலவழிக்கும் பல இலட்சம் கோடி மதிப்புள்ள தொகையை நியாயப்படுத்தும் போக்கும் அதிகமாகி வருகிறது. முன்னேற்றங்களில் முதன்மை இடம் வகிப்பதாய் சொல்லப்படும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இத்தகையத் தலைகீழ் பாடங்களை நமக்குள் புகுத்தி, இராணுவம் ஒன்றே உலக அமைதிக்குச் சிறந்த பாதுகாப்பு என்று நம்மைச் சிந்திக்க வைத்துள்ளன. நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் படைக் கருவிகளுக்கும், இராணுவப் பராமரிப்புக்கும் செலவிடும் தொகையில் நூற்றில் ஒரு பங்கை மக்கள் முன்னேற்றத்திற்கென ஒவ்வோர் அரசும் செலவிட்டால், உலகின் வறுமையும், பட்டினியும் அறவே ஒழிக்கப்படும் என்று ஐ.நா.போன்ற அமைப்புக்கள் ஆய்வுகள் செய்து, புள்ளி விவரங்களுடன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

Stockholm International Peace Research Institute (SIPRI) என்பது உலக அமைதியை வலியுறுத்திவரும் ஓர் உலக ஆய்வு மையம். ஒவ்வோர் ஆண்டும் உலகின் அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையினை இந்த மையம் வெளியிட்டு வருகிறது. இம்மையம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் அனைத்து நாடுகளும் இணைந்து 2012ம் ஆண்டில் இராணுவத்திற்கு செலவிட்டத் தொகை 1753 பில்லியன் டாலர்கள். அதாவது, 1,75,300 கோடி டாலர்கள். உலகெங்கும் இராணுவங்களுக்கென ஒவ்வொரு நாளும் செலவாகும் தொகை குறைந்தது 4.8 பில்லியன் டாலர்கள். உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இத்தொகை பிரித்து அளிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு குறைந்தது 250 டாலர்கள் கிடைக்கும். அண்மையில் பங்களாதேஷில் நிகழ்ந்த கட்டிட இடிபாட்டு விபத்தில் இறந்த தொழிலாளிகள் பெற்றுவந்த மாத ஊதியம் 38 டாலர்கள் என்பதை இங்கு நினைவுகூர்வது நல்லது. பொருளாதாரப் பாகுபாடுகளும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் ஆழமாக வேரூன்றியிருக்கும் உலகில் அமைதி நிலவுவது அரிது என்று ஐ.நா.உட்பட பல உலக அமைப்புக்கள் கூறி வந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், இன்னும் தங்கள் படைபலத்தை நம்பி அமைதியை நிலைநாட்ட விரும்பும் உலக அரசுகள் மதியொடு செயல்படுகின்றனவா என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், உலகம் தரும் அமைதி, கல்லறையில் காணப்படும் அமைதி. பல நியாயங்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளன. அந்த நியாயங்களுக்குக் குரல் கொடுத்தவர்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளனர். புதையுண்ட நீதிகளையும், நீதிமான்களையும் நாம் மறந்துவிட வேண்டும் என்ற அக்கறையுடன் அங்கு எழுப்பப்படும் கல்லறைகள் மிக அழகான பளிங்கினால் செய்யப்பட்டு, நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. தேவைப்பட்டால், நம் கவனத்தை இன்னும் திசைதிருப்ப, பல அலங்காரங்களை இந்தக் கல்லறையில் செய்வதற்கும் உலக அரசுகள் தயங்காது.

இந்தக் கல்லறை அலங்காரங்களில் ஒன்று போதைப் பொருள்கள். போதைப் பொருள்கள் எந்த ஒரு நாட்டிலும் அதிகாரப்பூர்வமான வர்த்தகம் இல்லையென்றாலும், இராணுவத்திற்கு அடுத்தப்படியாக உலகில் மிகவும் அதிக இலாபம் ஈட்டும் வர்த்தகம் போதைப் பொருள் வர்த்தகம்தான். அரசுகளின் அதிகாரப்பூர்வ வர்த்தகம் இராணுவம் எனில், போதைப் பொருள்கள் மறைமுகமாக, அதே நேரம், பல அரசுகளின் ஆதரவுடன் நடைபெறும் வர்த்தகம். சமுதாய அளவில் இராணுவம் அமைதியைத் தரும் என்ற தவறான கருத்தை அரசுகள் மனதில் ஆழப்பதிக்கின்றன. போதைப் பொருள்கள் தனி மனித வாழ்வில் அமைதியைத் தரும் என்று கறுப்புப்பண உலகம் நம்மை நம்பவைக்கிறது.

உலகம் தரும் கல்லறை அமைதி உண்மை அமைதி அல்ல; அந்தக் கல்லறைக்கு முன்னும், கல்லறைக்குப் பின்னும் தேட வேண்டிய உண்மைகளே நமக்கு அமைதியைத் தரும் என்று சொல்வதற்கு இன்றைய நற்செய்தியும், இந்த உயிர்ப்புக் காலம் முழுவதுமே நம்மை அழைக்கின்றன. இயேசுவின் பாடுகள், உயிர்ப்பு வழியாக நாம் இந்த உண்மைத் தேடலில் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தவே இயேசு தன் பிரியாவிடை பரிசாக, சீடர்களுக்கு தான் தரும் அமைதியைப் பற்றி கூறினார்:
"நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல."

உலக அமைதிக்கும், உண்மை அமைதிக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாட்டை 1960களில் வாழ்ந்த Jimi Hendrix என்ற இசைக் கலைஞர் இவ்வாறு கூறுகிறார்:
"When the power of love overcomes the love of power the world will know peace."
"ஆட்சிமீது அன்பு கொள்வதை விட, அன்பை ஆட்சி செய்ய அனுமதித்தால், உலகம் அமைதியைக் காணும்."

உலக அமைதிக்கென அயராது உழைத்துவரும் தலாய் லாமா, உலகில் எப்போது அமைதி உருவாகும்? என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் சொல்கிறார்: "நம் உள் உலகில் அமைதியை உருவாக்க முடியவில்லையென்றால், வெளி உலகில் ஒரு நாளும் அமைதியை உருவாக்க முடியாது" “We can never obtain peace in the outer world until we make peace with ourselves.” Dalai Lama

நமக்குள் எப்போது அமைதி உருவாகும்? நம்முள் பிளவுபட்டிருக்கும் பல பகுதிகள் ஒன்றிணைந்து வரும்போது அமைதி உருவாகும். இவ்வுலகம் காட்டும் பல்வேறு தவறான வழிகளை பின்பற்றி, நமக்குள் பல உலகங்கள் உருவாகும்போது, அந்த உலகங்களுக்கிடையே போர் மூள்கிறது. இப்போரில் நாம் எப்பக்கம் சார்ந்திருக்கிறோம் என்பதை அறியாமல் தடுமாறுகிறோம்.
நமது உள் உலகம் வெளி உலகம் என்ற விமானங்கள் நிலைதடுமாறி, தாறுமாறாகப் பறந்தாலும், அந்த விமானங்களை இயக்குபவர் தந்தையாம் இறைவன் என்பதை நாம் ஒவ்வொருவரும் நம்பி ஏற்றுக்கொண்டால், தடுமாற்றங்கள் மத்தியிலும் உண்மை அமைதியை நாம் உணர முடியும்.

உண்மையையும், நீதியையும் நிலைநாட்ட தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, அதற்காக தன் உயிரையும் இழந்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அமைதியைப் பற்றி சொன்ன வார்த்தைகளுடன் இன்றைய நம் சிந்தனைகளை நாம் நிறைவு செய்வோம்:
I refuse to accept the view that mankind is so tragically bound to the starless midnight of racism and war that the bright daybreak of peace and brotherhood can never become a reality... I believe that unarmed truth and unconditional love will have the final word.
Martin Luther King, Jr.
"இனவெறி, போர் என்ற இருளுக்குள் மனித சமுதாயம் புதைந்துவிட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அமைதியும், சகோதர அன்பும் உதயமாகும் காலைப் பொழுது வரும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன். எவ்வித படைக்கருவியையும் ஏந்தாமல் சொல்லப்படும் உண்மையும், நிபந்தனையற்ற அன்புமே இறுதியில் நிலைக்கும் என்பதை நான் நம்புகிறேன்."








All the contents on this site are copyrighted ©.