2013-05-03 16:23:42

சிரியா நாட்டு அகதிகளுக்கு இன்னும் அதிகமான மனிதாபிமான உதவிகளுக்குத் திருத்தந்தை அழைப்பு


மே,03,2013. லெபனன் அரசுத்தலைவர் Michel Sleiman, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.
25 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத்தலைவர் Sleiman.
லெபனனின் தற்போதைய நிலை, அந்நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கு இடையே உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு, இன்னும், சிரியாவில் இடம்பெறும் சண்டை போன்ற விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
லெபனனிலும், அதன் அண்டை நாடுகளிலும் பெருமளவான எண்ணிக்கையில் வாழும் சிரியா நாட்டு அகதிகள் குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், சிரியா நாட்டு அகதிகளுக்கு மேலும் அதிகமான மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுமாறு இச்சந்திப்பில் அழைப்பு விடுத்தார்.
மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியும், உறுதியான தன்மையும் ஏற்படுவதற்கு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டியதன் முக்கியத்துவமும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.