2013-05-02 16:06:17

திருத்தந்தை - இறைவனின் அன்புக்கு 'ஆம்' என்று சொல்லும் திருஅவை, தன் கதவுகளை அனைவருக்கும் திறந்துவிடும்


மே,02,2013. தூய ஆவியாரின் செயலாற்றலுக்கு இடம்தராமல் மூடிக்கொள்ளும் திருஅவை தனக்குள் பிளவுகளை உருவாக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலைத் திருப்பலியை நிகழ்த்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் துவக்கத்தில் எழுந்த கருத்து வேறுபாடுகளை நினைவுறுத்தும் திருத்தூதர் பணிகள் நூல் பகுதியை, தன் மறையுரையின் மையப்பொருளாக எடுத்துக்கொண்டார்.
இலங்கைக் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், வத்திக்கான் அருங்காட்சியக பணியாளர்களும் கலந்து கொண்ட இத்திருப்பலியில், 'ஆம்' என்று சொல்லும் திருஅவை வளர்ச்சி காணும் என்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை.
புறவினத்தாரை திருஅவைக்குள் வரவேற்பது குறித்து எருசலேமில் எழுந்த கருத்து வேறுபாடுகளில், 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் கூறிய குழுக்கள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை, ஏனையச் சீடர்கள் மீது சுமத்தக் கூடாது என்று புனிதர்கள் பேதுருவும், யாக்கோபும் கூறிய அறிவுரையை வலியுறுத்திப் பேசினார்.
இன்றையச் சூழலில் நுகத்தைச் சுமப்பது என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பி, எவ்வகை பாரங்களையும் இயேசுவின் அன்பு குறைத்துவிடும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் அன்புக்கு 'ஆம்' என்று சொல்லும் திருஅவை, தன் கதவுகளை அனைவருக்கும் திறந்துவிடும் என்றும், இவ்விதம் வாழும் சமுதாயத்தில் அன்பின் வழியாக அனைத்து வேறுபாடுகளையும் நாம் வெற்றிகொள்ள முடியும் என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.