2013-05-01 15:19:02

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 01, 2013. இப்புதனன்று உலக தொழிலாளர் தினம் சிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்களின் பாதுகாவலராகிய புனித யோசேப்பின் விழாவும் கூட. பல நாடுகளுக்கு இந்நாள் விடுமுறை நாள். இத்தாலியும் வத்திக்கானும் இந்நாளை பெரிய அளவில் சிறப்பித்துக்கொண்டிருக்க, திருத்தந்தையின் இப்புதன் பொதுமறைபோதகத்தில் கலந்துகொள்ள வந்த கூட்டமும் அதை நிரூபித்துக்கொண்டிருந்தது. வழக்கத்தைவிட இப்புதனன்று கூட்டம் அதிகமாக இருந்ததால், தூய பேதுரு வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகள் அதிகாலையிலேயே போக்குவரத்திற்கு மூடப்பட்டுவிட்டன.
உள்ளூர் நேரம் ஏறத்தாழ பத்து மணிக்கு திறந்த காரில் தூய பேதுரு வளாகம் வந்த திருத்தந்தை, முக்கால் மணிநேரம் அவ்வாளகத்தைக் காரிலேயே சுற்றிவந்து, அங்கிருந்த சிறு குழந்தைகளை அணைத்து முத்தமிட்டார். பின்னர், வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து, புனித யோசேப்பு குறித்தும் தொழிலாளர் நிலை குறித்தும் இப்புதன்மறைபோதகத்தை வழங்கினார்.
அன்னை மரியின் மாதமாகிய மேமாதத்தின் முதல் நாளில், தொழிலாளர் புனித யோசேப்பின் விழாவை நாம் சிறப்பிக்கின்றோம். நாசரேத்தின் தச்சுத்தொழிலாளியாகிய புனித யோசேப்பு, தொழிலின் மாண்பு மற்றும் அதன் அவசியம் குறித்து நமக்கு நினைவூட்டுகிறார். தொழில் என்பது, உலகிற்கு வகுக்கப்பட்ட இறைத்திட்டத்தின் ஒரு பகுதி. இறைவனின் படைப்பை பேணி வளர்த்து மேம்படுத்தும்போது, நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்களாக, நம் மாண்பில் வளர்கிறோம். இதற்காகத்தான், வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்னைக்கு சமூக அளவிலான ஒருமைப்பாடும், நீதி மற்றும் ஞானம்நிறைந்த கொள்கைகளும் அவசரமாகத் தேவைப்படுகின்றன. வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குமாறும், தங்கள் கல்வி, வேலை மற்றும் அயலாருடன் கொண்டிருக்கும் உறவில் தங்களை முழுமையாக அர்ப்பணிக்குமாறும், இங்கு கூடியிருக்கும் இளைய சமுதாயத்திற்கு ஊக்கமளிக்கிறேன்.
அமைதியான செபத்திற்கும், இயேசுவுடன் நெருக்கமாக இருப்பதற்கும், ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் புனித யோசேப்பு, ஒவ்வொரு நாளும் நாம் செபிப்பதற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம் என்பது குறித்து சிந்திக்குமாறு நமக்கு அழைப்புவிடுக்கிறார். கிறிஸ்துவின் வாழ்வு மறையுண்மைகளை ஆழ்ந்து தியானிப்பதற்கு சிறந்த வழி செபமாலை என்பது இந்த மேமாதத்தில் இயல்பாகவே நம் நினைவுக்கு வருகிறது. நம் தினசரிப் பணிகளில் விசுவாசமுடன் இருக்கவும், இயேசுவை நோக்கி நம் மனதையும் இதயத்தையும் செபத்தில் உயர்த்தவும், புனித யோசேப்பும் கன்னி மரியாவும் நமக்கு உதவுவார்களாக.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை, தொழிலாளர்தினப் பின்னணியில் வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இப்புதன் தொழிலாளர் தினத்தையொட்டி தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தார் பாப்பிறை. 'அன்பு இளைய சமுதாய நண்பர்களே! புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். துன்ப வேளைகளை கடந்துசென்ற அவர் எப்பொழுதும் நம்பிக்கையுடன் செயல்பட்டார் மற்றும் துன்பங்களை மேற்கொள்வது குறித்தும் அறிந்திருந்தார்' என்பது திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இருந்தது.








All the contents on this site are copyrighted ©.