2013-05-01 16:04:16

கிழக்கு திமோர் நாட்டில் சிறையில் இருப்போர் மத்தியில் பணியாற்றும் இயேசு சபையினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் பெரும் உந்துதல்


மே,01,2013. புனித வியாழன் மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வளர் இளம் கைதிகள் இல்லத்தில் திருப்பலியை நிகழ்த்தியது, சிறையில் இருப்போர் மத்தியில் தாங்கள் மேற்கொண்டுள்ள பணிக்கு பெரும் உந்துதலாக அமைந்தது என்று இயேசு சபை அருள் பணியாளர் Noel Oliver கூறினார்.
கிழக்கு திமோர் நாட்டில் சிறையில் இருப்போர் மத்தியில் பணியாற்றும் இயேசு சபையினர், தங்கள் பணியைக் குறித்தும், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறன்று அங்கு தாங்கள் நிறைவேற்றும் திருப்பலியைக் குறித்தும், Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளனர்.
சிறையில் நடைபெறும் திருப்பலியில் இளையோர் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவதையும், ஒப்புரவு அருட்சாதனத்திலும், நற்கருணைப் பந்தியிலும் அவர்கள் பங்கேற்பது தங்கள் பணிக்கு பெரும் ஆறுதலாக உள்ளதென்றும் அருள் பணியாளர் Oliver கூறினார்.
கிழக்கு திமோர் நாட்டின் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைந்த இளையோர் என்பதால், அங்குள்ள சிறைகளில் உள்ளோரில் அதிகமானோர் இளையோர் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.