2013-04-29 15:17:11

வாரம் ஓர் அலசல் – நினைத்துப் பார்ப்போமா?


ஏப்.29,2013 RealAudioMP3 . ஒரு சமயம் புத்தர், மதம் என்ற பெயரில் அக்காலத்திலிருந்த மூடநம்பிக்கைகளைச் சாடிக்கொண்டிருந்தார். அவரது அந்தப் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவனுக்குக் கடும் கோபம் வந்தது. ஏனெனில் அவன் நீண்டகாலமாக மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவன். அவன் எழுந்து புத்தரின் முகத்தில் காறி உமிழ்ந்தான். புத்தர் சிரித்தபடி, அவ்வளவுதானா? இல்லை சொல்வதற்கு வேறு எதுவும் இருக்கிறதா? என்று கேட்டார். துப்பியவனுக்கு ஒன்றும் புரியவில்லை. புத்தர் இப்படிக் கேட்பார் என அவன் எதிர்பார்க்கவே இல்லை. உடனே அங்கிருந்து அவன் போய்விட்டான். அவனுக்கு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. விடிந்ததும் முதல்வேலையாக புத்தரிடம் சென்று, அவர் காலில் விழுந்து, ஐயா, என்னை மன்னித்து விடுங்கள் என்று அவன் கண்ணீர் வடித்தான். அதற்கு புத்தர், உன்னை யார் மன்னிப்பார்கள் என்று கேட்டார். அதற்கு அவன், ஐயா, நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும், நேற்று உங்கள் முகத்தில் காறித் துப்பியவன் நான்தான் என்று சொன்னான். அப்போது புத்தர், நீ யார்மீது துப்பினாயோ அவர் இப்போது இல்லை. துப்பியவனும் இப்போது இல்லை. இருவரும் நேற்றே இறந்து போனார்கள். நீயும் புது மனிதர். நானும் புது மனிதர். அப்படியிருக்க, நீ யாரிடம் மன்னிப்புக் கேட்பாய், நான் யாரை மன்னிப்பேன், அது நடக்காத காரியம் என்றார்.
ஆம். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு நாளும் மனிதர் மாறி வருகின்றனர். காலையில் ஒரு மனநிலையோடு இருக்கும் மனிதர் மாலையில் வேறு ஒரு மனநிலைக்கு மாறி விடுகின்றார். காலம் என்ற நதி நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பது போல, மனிதரும் கணந்தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றனர். மனிதரது இரத்தமும் அணுக்களும் எண்ணங்களுமே மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. மாற்றம் காணும் இவ்வாழ்வில் சில நினைவுகள் மட்டும் மனிதர் மனதில் நிரந்தரமாகத் தங்கி விடுகின்றன. சில நினைவுகள் அவ்வப்போது வந்து போகின்றன. நினைக்க வேண்டிய சில நினைவுகள் நினைவுக்கு வராமலே போய்விடுகின்றன. சொந்தங்களிலும், நெருங்கிய உறவுகள் மத்தியிலும் நிகழும் நிகழ்வுகள் மனிதருக்கு அவ்வளவு எளிதில் மறந்துபோவதில்லை. ஆனால் தனது வாழ்வைப் பாதிக்காத பொதுவான நிகழ்வுகள் குறித்த நினைவுகள் பலருக்கு எளிதில் மறந்து போகின்றன. கடந்த புதன்கிழமையன்று பங்களாதேஷில் எட்டுமாடிக் கட்டிடம் ஒன்று இடிந்ததில் 300க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 15 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களை இன்னும் காணவில்லை. இன்னும் யாரும் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை போய்விட்டது என இத்திங்கள் செய்தி கூறுகின்றது. இந்தக் கோர விபத்து எத்தனை பேருக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது? இதுபோல் நமது பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நினைத்து அவர்களுக்கு உதவிகளைச் செய்வதற்கு எத்தனை பேர் முன்வருகிறோம்?
இருந்தபோதிலும் பல அன்னை தெரேசாக்கள், உலகில் துன்புறும் பலரை மறக்காமல் நினைவில் வைத்து அவர்களுக்காகச் செபிக்கின்றனர், அவர்களுக்கு உதவிகளைச் செய்கின்றனர். சமுதாயத்தில் மனிதம் மலரத் தூண்டுதலாக இருக்கின்றனர். பங்களாதேஷின் டாக்காவையடுத்துள்ள சவார் பகுதியில் இரண்டு ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வந்த Rana Plaza என்ற 8 மாடி கட்டிடம் இடிந்ததில், அங்கு பணியில் இருந்த ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இக்கட்டிட விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகத் தன்னோடு சேர்ந்து செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று கேட்டிருந்தார். இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் பேதுரு வளாகத்தில் இருந்த ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபின், பங்களாதேஷ் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆறுதலையும், செபத்தையும் தெரிவித்தார். அதோடு, தொழிலாளரின் மாண்பும் பாதுகாப்பும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்கு மிக உருக்கமுடன் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். RealAudioMP3
தமிழ் நாளிதழ் ஒன்றில் இஞ்ஞாயிறன்று பிரசுரமாகியிருந்த பேசும் படம் ஒன்று, நமது நினைவில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் உடல் கருகி பலியான அந்த வீட்டுத் தலைவருக்காக அனைவரும் அழுது கொண்டிருந்தனர். ஆனால் தங்களது அப்பா இறந்துவிட்டார் என்பதைப் புரிந்துகொள்ளாத இரு பச்சிளம் சிறார் அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தனர். இத்தகைய விபத்துகளும், இவற்றால் பாதிக்கப்படும் குடும்பங்களின் அவலங்களும் நமது நினைவைவிட்டு விலகாமலே இருக்கின்றன. நாரணாபுரத்தில் ரத்னா பட்டாசு தொழிற்சாலை வளாகத்தின் மரத்தடியில் ஃபேன்சி ரக வெடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வெடி உராய்வு ஏற்பட்டதில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். 7 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஞாயிறு என்பதால், பரிசோதனைக்கு அதிகாரிகள் வர வாய்ப்பில்லை என்பதைத் தெரிந்துகொண்டு தொழிற்சாலையில் அளவுக்கு அதிகமானோர் பணியி்ல் ஈடுபடுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று கடந்த வியாழனன்றும் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் குண்டலபட்டி அருகே பட்டாசு ஆலையில் மருந்து உராய்வு ஏற்பட்டதில் இருவர் பலியாகினர்.
பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்துக்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாவது அடிக்கடி இடம்பெறுகிறது. உலகில், குறிப்பாக சிரியா போன்ற நாடுகளில் இடம்பெறும் ஆயுதச் சண்டைகளில் தினமும் எத்தனையோ மனித உயிர்கள் காவு கொடுக்கப்படுகின்றன. இலங்கையில் இடம்பெற்றது, இடம்பெற்றுக்கொண்டிருப்பது நம் நினைவில் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்நேரத்தில் உலகில் வேதிய ஆயுதச் சண்டையில் பலியானவர்களை நினைவு கூருவதற்கு நம் அனைவரையும் அழைக்கிறது ஐக்கிய நாடுகள் நிறுவனம். ஏப்ரல் 29, இத்திங்கள் வேதிய ஆயுதங்களுக்குப் பலியானவர்களை நினைவுகூரும் அனைத்துலக தினம். அனைத்துலக வேதிய ஆயுதங்கள் ஒழிப்பு ஒப்பந்தம் 1997ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஏப்ரல் 29ம் தேதியன்று வேதிய ஆயுதங்களுக்குப் பலியானவர்களை நினைவுகூரும் அனைத்துலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட இந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், வேதிய ஆயுதங்களுக்குப் பலியானவர்களை இந்நாளில் நினைவுகூருவோம் என்றும், வேதிய ஆயுத அச்சுறுத்தலிலிருந்து வருங்காலத் தலைமுறைகளை விடுவிப்பதற்கு ஆவன செய்வோம் என்றும் கேட்டுள்ளார். பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களுடன், வேதிய ஆயுதங்களும் உலகில் ஒழிக்கப்படுவதற்கு இத்தினத்தில் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வுலக தினம் கடைப்பிடிக்கப்படுவது குறித்து 2005ம் ஆண்டு ஐ.நா.பொது அவையில் தீர்மானிக்கப்பட்டது. தற்போது சிரியாவில் நடைபெற்றுவரும் சண்டையில் சிரியா இராணுவமும், புரட்சிப்படைகளும் வேதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகப் பரவலாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்வதற்கு இத்திங்களன்று ஐ.நா.குழு ஒன்று அந்நாடு செல்வதாக பான் கி மூன் கூறியுள்ளார்.
வேதிய ஆயுதங்கள் மனிதரை நேரிடையாகக் கொல்லுகின்றன. விவசாயத்தை அழித்து விலங்குகள் பசியால் மடியச் செய்கின்றன. நஞ்சு ஏற்றப்பட்ட ஈட்டிகளையும் வில்களையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் படைவீரர்கள் பயன்படுத்தியதாக இந்தியப் புராணங்களிலும் ஹோமரின் காவியங்களிலும் வாசிக்கிறோம். ஏறக்குறைய கி.மு.1000மாம் ஆண்டில் சீனர்கள் போர்களில் நச்சுத் தாவரங்களிலிருந்து புகையைப் பரப்பியதாக அறிகிறோம். வேதிய ஆயுதங்கள் ஏற்படுத்திய கடும் விளைவுகளால், நஞ்சுகலந்த குண்டுகளை இனிமேல் பயன்படுத்தமாட்டோம் என பிரான்சும் புனித உரோமைப் பேரரசும் 1675ம் ஆண்டில் Strasburgல் கையெழுத்திட்டபோது, வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது உலகில் தடை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் 1899 மற்றும் 1907ம் ஆண்டுகளில் Hagueல் ஏற்பட்ட உடன்பாட்டின் மூலம் இவ்வொப்பந்தம் மீண்டும் மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆயினும் இது சரிவர அமல்படுத்தப்படவில்லை. முதல் உலகப்போரின்போது ஒரு இலட்சம் டன்களுக்கு மேற்பட்ட குளோரின் நச்சுவாயு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதனால், 1925ம் ஆண்டில் வேதிய ஆயுதங்கள் தடை குறித்த ஒப்பந்தம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தம் எழுத்தில் மட்டுமே இருப்பதாகவே இக்காலத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன. ஏனெனில் ஐ.நா.கணிப்புப்படி 2010ம் ஆண்டில் உலகில் ஏறக்குறைய 30 ஆயிரத்து 308 டன்கள் எடையுடைய வேதிய ஆயுதங்கள் இருந்தன எனத் தெரிகிறது.
ஆயுதச் சண்டைகள், அதிலும் நஞ்சுப்பொருள்கள் கலந்த ஆயுதச் சண்டைகளினால் ஒருபோதும் அமைதியைக் கொண்டுவர முடியாது. சண்டைகள் அப்பாவி மக்களில் உடல் மற்றும் உள்ள ஊனங்களை நிரந்தரமாக ஏற்படுத்தி விடுகின்றன. மனித மனங்களில் கருணையும் அன்பும் மன்னிப்பும் மனிதமும் ஊற்றெடுக்காதவரை ஆயுதச் சண்டைகளும், பட்டாசு ஆலை வெடி விபத்துக்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். பங்களாதேஷில் அந்த எட்டுமாடிக் கட்டிடம் பழுதாக இருக்கின்றது என்று தெரிந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தொடர்ந்து வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். என்ன கொடுமை இது. மனிதர் பிறர் உயிரைத் தன்னுயிர் போல நினைக்காதவரை இக்கோர நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். காந்திஜி எந்தப் பதவியில் இல்லாவிட்டாலும் அவரது உருவம் எல்லா இந்திய பணத் தாள்களிலும் இருப்பதற்குக் காரணம் அவர் தனக்காக வாழவில்லை என்பதே. தாகூர் சொன்னார் – பிறரைப் பற்றி அன்பு இல்லாமல் சுயநலமாக வாழ்ந்து வருபவர்கள் தங்களையே சாப்பிடுகிற விலங்குகள் மாதிரி என்று. வாழ்க்கை தனக்கான வியாபாரமல்ல, அது பிறர்க்கான யாகம். எனவே துன்புறும் மக்களின் நிலைகளை மறக்காமல் நமது இதயங்களில் கருணையும் அன்பும் வற்றாமல் ஊற்றெடுக்கச் செய்வோம்.








All the contents on this site are copyrighted ©.