2013-04-26 15:48:21

புதுடெல்லி பிறரன்பு மையம் : நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைத்துவிதமான வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்


ஏப்.26,2013. குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றி அவற்றுக்கு ஆதரவு வழங்குவதற்கு உதவும் வகையில், பெண்கள், சிறுமிகள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று புதுடெல்லி உயர்மறைமாவட்ட பிறரன்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
“பாலியல் வன்செயலை நிறுத்து” என்ற தலைப்பில் Chetanalaya என்ற புதுடெல்லி உயர்மறைமாவட்ட பிறரன்பு மையம் இவ்வியாழனன்று தொடங்கிய வன்முறைக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய அம்மையத்தின் இயக்குனர் அருள்பணி அகுஸ்தீன் சவரி ராஜ் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக மட்டுமல்லாமல், ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிரான உரிமை மீறல்களும் தொடர்ந்து இடம்பெற்றுவருவது, இந்தியாவுக்கு இடர்நிறைந்த விவகாரமாக இருக்கின்றது என்றுரைத்தார் அருள்பணி சவரி ராஜ்.
1994ம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட சமூகநலப்பணி மையமாக செயல்பட்டுவரும் Chetanalaya மையத்தின் பணிகளால் குறைந்தது 20 ஆயிரம் பெண்கள் பலனடைந்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்திய காரித்தாஸ் நிறுவனத்தோடு தொடர்புடைய இந்த Chetanalaya மையத்தின் உதவியுடன் மேலும் ஆறாயிரம் பெண்கள் சிறுதொழில்களைத் தொடங்கியுள்ளனர் என்றும், 600 குடும்பங்கள் வீடுகளைக் கட்டியுள்ளன என்றும் அருள்பணி சவரி ராஜ் கூறினார்

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.