2013-04-25 16:18:17

புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே உருவாகியுள்ள ஓர் அமைதி உடன்பாடு


ஏப்.25,2013. பெத்பகுவில் (Bethphage) வாழும் கிறிஸ்தவர்களுக்கும், கிழக்கு எருசலேமில் வாழும் இஸ்லாமியருக்கும் இடையே உருவாகியுள்ள ஓர் அமைதி உடன்பாடு, புனித பூமி அனைத்திற்கும் சிறந்ததோர் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று புனித பூமியில் வாழும் ஆயர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்தவ, இஸ்லாம் மதத் தலைவர்கள், மற்றும் நகரத் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அண்மையில் பெத்பகு நகரில் சந்தித்து, மத ஒற்றுமையை வலியுறுத்தும் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
கிறிஸ்தவர்கள் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற, இலத்தீன் வழிபாட்டு முறை எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷொமாலி, இத்தகைய உடன்பாடு புதியதொரு வரலாற்றை புனித பூமியில் துவக்கியுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ சமுதாயத்தின் பிரதிநிதியாக ஆயர் ஷொமாலி அவர்களும், இஸ்லாமியர் சார்பில் எருசலேம் தலைமைப் போதகரான Mohammad Hussein அவர்களும், கிழக்கு எருசலேம் ஆளுநர் Adnan Husseini அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.