2013-04-24 16:49:36

பொதுவான கொள்கைகள் மூலம் புத்தகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், யுனெஸ்கோ


ஏப்.24,2013. பலதரப்பட்ட புத்தகங்கள், ஆசிரியர் பக்கங்கள் ஆகியவை மிகவும் பயனுடையவை என்பதால், தகுந்த பொதுவான கொள்கைகள் மூலம் அவைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தின் இயக்குனர் Irina Bokova கேட்டுக்கொண்டார்.
பலவகை புத்தகங்களைக் கொண்ட நூலகங்கள் நமது பொதுவான சொத்து என்றும், இந்த நூலகங்கள், நமது அழகான கண்டுபிடிப்புக்களை, எல்லைகளையும் கடந்து பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற இடங்களாக உள்ளன என்றும் Bokova கூறினார்.
ஏப்ரல் 23ம் தேதியான இச்செவ்வாயன்று அனைத்துலகப் புத்தக மற்றும் காப்புரிமை தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு தெரிவித்த Bokova, அறிவுச்சொத்தின் பாதுகாப்பு, டிஜிட்டல் உலகத்தில் புத்தக வெளியீடுகள், அச்சகத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் போன்றவை குறித்துச் சிந்திப்பதற்கு இந்நாள் ஏற்ற தினமாக உள்ளது என்றும் கூறினார்.
ஏப்ரல் 23ம் தேதி உலக இலக்கியத்தின் அடையாள நாளாகும். 1611ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று Miguel de Cervantes, William Shakespeare,Inca Garcilaso de la Vega ஆகியோர் இறந்தனர். மேலும் இந்நாள், Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla, Manuel Mejía Vallejo ஆகிய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிறந்த அல்லது இறந்த தினமும் ஆகும்.

ஆதாரம் : UNESCO







All the contents on this site are copyrighted ©.